Last Updated : 04 Jul, 2014 09:00 AM

 

Published : 04 Jul 2014 09:00 AM
Last Updated : 04 Jul 2014 09:00 AM

கபினியிலிருந்து வெளியேற்றும் நீர் அளவு குறைப்பு: கர்நாடக விவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி

கர்நாடக விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, கபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வியாழக்கிழமை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த 10 நாட்களாக கேரள மாநிலம் வயநாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்ததால் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கடந்த 18-ம் தேதி கபினி அணையிலிருந்து தமிழகத்திற்காக வினாடிக்கு 4000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டத‌ற்கு எதிர்ப்பு தெரி வித்து மைசூர், மாண்டியா மாவட்டங்களில் உள்ள பல் வேறு விவசாய சங்கங்கள் போராட் டத்தில் குதித்தன. கர்நாடக நீர்ப்பாசனத்துறை தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் திறந்துவிட்டதால், கடந்த 21-ம் தேதி மைசூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட‌ விவசாயிகள் மைசூர்-டி.நரசிப்புரா சாலையில் உள்ள கபினி ஆற்றுப்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 30-ம் தேதி கபினி அணை பாதுகாப்புக் குழு,கபினி நீர்ப்பாசன விவசாயி கள் சங்கம், கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மைசூரில் உள்ள கர்நாடக நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக நீர்ப்பாசனத் துறை அதிகாரியிடம் ஒரு மனு அளித்தனர். அதில், “கபினி அணை இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளின் நீர் தேவை இன்னும் முழுமையாக பூர்த்தியாக வில்லை. இந்த சூழலில் தமிழ் நாட்டுக்கு நீர் திறந்துவிடக்கூடாது. தமிழ்நாட்டுக்கு நீர் விடுவதை இன்னும் 3 நாட்களுக்குள் நிறுத்தாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என அதில் கூறியிருந்தனர்.

கர்நாடக விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக கபினி அணை யிலிருந்து வெளியேறும் நீரின் அளவை அம்மாநில நீர்ப்பாசனத் துறை வியாழக்கிழமை அதிரடியாக குறைத்தது.

கடந்த 19-ம் தேதியிலிருந்து வினாடிக்கு 4000 கன அடியிலிருந்து 8000 கன அடி வரை வெளியேற்றப்பட்ட நீரின் அளவு, வியாழக்கிழமை (மாலை 5 மணிக்கு) 1800 கன அடியாகக் குறைக்கப்பட்டது. அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 12 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் நீர்மட்டம் 47.34 அடி

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக வினாடிக்கு 8,262 கனஅடி என்ற அளவில் இருந்த நீர் வரத்து, தற்போது 4,906 கனஅடியாகக் குறைந்துள்ளது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47.34 அடியாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x