கவர்ச்சித் திட்டங்கள் தவிர்க்கப்படும்: மத்திய அரசு உறுதி

கவர்ச்சித் திட்டங்கள் தவிர்க்கப்படும்: மத்திய அரசு உறுதி
Updated on
1 min read

கவர்ச்சித் திட்டங்களும், தேவையற்ற செலவினங்களும் தவிர்க்கப்படும் என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து, மத்திய பட்ஜெட் 2014-ல் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்ட அறிவிப்பு:

"நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை இனியும் அரசு பொறுத்துக் கொள்ளாது. மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருந்தது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, இராக் உள்நாட்டு சர்ச்சையும், பருவமழை எதிர்பார்த்த அளவைவிட குறைவாக பெய்துள்ளதும் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

செலவினங்களை நிர்வகிக்க தனி ஆணையம்

இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த மிக முக்கியமான, துணிச்சலான முடிவுகள் மேற்கொள்ளப்படும். கவர்ச்சித் திட்டங்கள், அனாவசிய செலவினங்களை அரசு தவிர்க்க வேண்டும். அரசு செலவினங்களை நிர்வகிக்க தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்படும்.

நாட்டின் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும். நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.1% ல் இருப்பதை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மானியங்கள், எரிபொருள் பொருளாதார கொள்கைகள், உரங்களுக்கான மானியம் மறு சீரமைக்கப்படும். வரி விவகாரங்களை கையாள உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7% முதல் 8% வரை அதிகரிப்பதே இலக்கு ஆகும். வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உற்பத்தித் துறையிலும், கட்டுமானத் துறையிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம். வங்கிகளுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படும்" என்றார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in