

நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு நிலவியது. ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பழங்குடியின மக்கள், சிறுபான்மை மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
மேலும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமராக இருந்தவர்கள் பயணம் செய்தது மிகவும் குறைவு. தேர்தலின் போது மட்டும் ஒரு சில பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமர்கள் திரும்பி உள்ளனர். ஆனால், 2014-ம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு அடிக்கடி வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி நேற்று கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் கிழக்கு நோக்கிய கொள்கை காரணமாக நாகாலாந்தில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. பிரதமரான பிறகு நரேந்திர மோடி 51 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளார். இதற்கு முன்பு இருந்த அனைத்து பிரமர்களின் ஒட்டுமொத்த பயணம் கூட இந்த அளவுக்கு இருக்காது” என்று தெரிவித்தார்.