அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடி உறுதி

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடி உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடனும், நாகாலாந்தில் பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடனும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த வெற்றி நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கட்சித் தொண்டர்கள் அவரை மலர்தூவி வரவேற்றனர்.

வடகிழக்கு மாநில மக்கள், பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் மொபைல் போன்களில் பிளாஷ்லைட் வெளிச்சம் காட்டுமாறு தொண்டர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதையேற்று பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பிளாஷ்லைட் வெளிச்சத்தால் அரங்கை ஒளிர செய்தனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: முந்தைய காலங்களில் வடகிழக்கு மாநிலங்கள் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படாது. மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இப்போது வடகிழக்கு மாநிலங்கள் நமக்கு மிகவும் நெருக்கமாக வந்துவிட்டன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே பாஜகவின் இலக்கு. அந்த இலக்கை நோக்கி பயணம் செய்கிறோம். பெரும்பாலான கட்சிகள் தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படுகின்றன. பாஜகவை பொறுத்தவரை வளர்ச்சி திட்டங்களை முன்னிறுத்தி செயல்படுகிறோம்.

நாடு சுதந்திரம் அடைந்தபிறகும் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படவில்லை. போதிய அளவில் சாலை, ரயில், விமான போக்குவரத்து வசதிகள் செய்யப்படவில்லை. அந்த நிலையை மாற்றி வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம். அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவாக வடகிழக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

நரேந்திர மோடி எங்களை விட்டு விலகி சென்றுவிடக் கூடாது என்று நாட்டு மக்கள் வேண்டுகின்றனர். மக்களின் சக்தியால் பாஜக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்போது வடகிழக்கிலும் புதிய சாதனையை படைத்துள்ளது. மூன்று மந்திரங்களால் பாஜக வெற்றிப் பாதையில் முன்னேறி செல்கிறது. முதலாவது பாஜக அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள். 2-வது பாஜக தொண்டர்கள் பணியாற்றும் விதம், 3-வது பாஜக தொண்டர்களின் சேவை மனப்பான்மை. இந்த வெற்றி தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in