ஹத்ராஸ் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் 3 பேரை விடுவித்தது நீதிமன்றம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

லக்னோ: ஹத்ராஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் மூவரை விடுதலை செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020 செப்டம்பர் 14-ஆம் தேதி ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய தலித் பெண் ஒருவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க வயலுக்குச் சென்றார். அங்கு அவரை ஆதிக்க சாதியாக அறியப்படும் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த சந்தீப், ராமு, லவகுஷ், ரவி என்ற 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அது வெறும் பாலியல் வன்கொடுமை வழக்காக மட்டும் இருக்கவில்லை. அந்தப் பெண்ணின் நாக்கை துண்டித்து, அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்யவும் முயற்சி நடந்ததாக கூறப்பட்டது. மோசமாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர். வலுக்கட்டாயமாக பெண்ணின் உடலைத் தகனம் செய்ய போலீஸார் நிர்பந்தத்தினர் என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் விருப்பத்துடனே தகனம் செய்யப்பட்டது என போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையே 6 நாட்களுக்குப் பின்னர் 2020-ல் செப்டம்பர் 20-ஆம் தேதி தான் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாறியது. இந்த வழக்கு தொடர்பாக ஹத்ராஸ் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் (22), லவகுஷ் (19), ராம்குமார் (28), ரவி (28) ஆகியோர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு நடந்து வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் எஸ்சி/எஸ்டி சட்டப் பிரிவு 304 கீழ் சந்தீப் மட்டும் குற்றவாளி என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறார். மற்ற மூவரையும் குற்றமற்றவர்கள் என ஹத்ராஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு விடுவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட மூவர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக உத்தரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in