ஆம் ஆத்மியில் இருந்து விலகல் - கர்நாடக பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஸ்கர் ராவ்

பாஜகவில் இணைந்த பாஸ்கர் ராவ்
பாஜகவில் இணைந்த பாஸ்கர் ராவ்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஸ்கர் ராவ் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், போட்டியிடும் நோக்கில் பெங்களூரு மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய பாஸ்கர் ராவ் கடந்த ஏப்ரலில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கர்நாடக அமைச்சர் அசோகா, கர்நாடக பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவருமான‌ அண்ணாமலை ஆகியோரை பாஸ்கர் ராவ் சந்தித்தார். அப்போது பாஜகவில் இணைவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது பாஸ்கர் ராவ் பேசுகையில், ''32 ஆண்டுகள் கர்நாடகாவில் ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதால் அரசியலில் இணைந்தேன். ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிராக போராடுவதாக சொல்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை வாங்குகிறது. அந்தக் கட்சியில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் அதில் இருந்து விலகியுள்ளேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடும் தொலைநோக்கு பார்வையும் என்னை மிகவும் ஈர்த்தது. அதனாலே பாஜகவில் இணைந்துள்ளேன். பாஜக தேசியக் கட்சி என்பதால் நாடு முழுவதுக்கும் என்னால் சேவை செய்ய முடியும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in