Last Updated : 10 Sep, 2017 04:12 PM

 

Published : 10 Sep 2017 04:12 PM
Last Updated : 10 Sep 2017 04:12 PM

கவுரி லங்கேஷ் படுகொலையை தொடர்ந்து கன்னட எழுத்தாளர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, கன்னட எழுத்தாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு கர்நாடக அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2 ஆண்டுகளில் மூத்த எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியும், மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷும் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடகாவில் எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ள கன்னட எழுத்தாளர்களுக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கர்னாட், கவிஞர் சித்தலிங்கையா, எழுத்தாளர்கள் பரகூர் ராமசந்திரப்பா, மரளு சித்தப்பா, பேராசிரியர் கே.எஸ்.பகவான், முற்போக்கு மடாதிபதி வீரபத்ர சென்னமல சுவாமிஜி உள்ளிட்ட 35 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல வேறு சில மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு அமைப்பினர் ஆகியோருக்கும் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறும்போது, “எழுத்தாளர்களுக்கும், முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. அதன்படி முதல் கட்டமாக சிலருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளோம். இதில் சிலர் பாதுகாப்பு வேண்டாம் என தெரிவித்தனர். அதை ஏற்காமல் அவர்களது வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, லிங்காயத்து சமூகத்தை தனி மதமாக அறிவிக்கக் கோரும் மடாதிபதிகளுக்கும், சிறுபான்மை அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம். இது முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே. இதில் யாருக்கும் முன்னுரிமை காட்டப்படவில்லை” என்றார்.

உள்துறையிடம் அறிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்க, மாநில உளவுத்துறை பிரிவு ஐஜி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x