Last Updated : 22 Sep, 2017 06:46 PM

 

Published : 22 Sep 2017 06:46 PM
Last Updated : 22 Sep 2017 06:46 PM

‘வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை மூடியதால்தான் கார்த்தி சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ்’

கார்த்தி சிதம்பரம் தனது வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் பலவற்றை மூடினார், இதனால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினோம், அவர் வெளிநாடு தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக, என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

விசாரணையில் இந்த ஊழல் வழக்கில் பல விவகாரங்கள் எழுந்துள்ளதாகவும் மேலும் சில தகவல்கள் வெளியாகும் என்றும் சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வின் முன் சீலிடப்பட்ட கவரில் விசாரணையில் தெரிய வந்தத் தகவல்களை அறிக்கையாக சிபிஐ சமர்ப்பிக்க விரும்பியது. ஆனால் இதனை கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபல் எதிர்த்தார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “அயல்நாட்டில் அவர் என்ன செய்தார் என்ற விவரங்களே இந்த சீலிடப்பட்ட உறையில் உள்ளது” என்றார். ஆனால் கபில் சிபல் இதனைத் திரும்பத் திரும்ப எதிர்த்தார்.

இதனையடுத்து சீலிடப்பட்ட உறையில் என்ன உள்ளது என்பதைக் கூறிவிடுவதாக துஷார் மேத்தா கூறினார், “அயல்நாட்டில் இருந்த போது அவர் (கார்த்தி சிதம்பரம்) என்ன செய்தார் என்பதே இதில் உள்ளது. விசாரணையில் தனக்கு ஒரேயொரு வங்கிக் கணக்குதான் அயல்நாட்டில் உள்ளது என்றார். ஆனால் அயல் நாடு சென்றபோது பல வங்கிக் கணக்குகளை மூடியுள்ளார். நான் அனைத்தையும் கூற விரும்பவில்லை ஏனெனில் அவருக்கு அது தர்மசங்கடத்தையே அளிக்கும். ஆனால் நான் கூறியே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்” என்றார்.

கபில் சிபல், துஷார் மேத்தாவிடம், “வங்கிக்கணக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் பற்றி ஒரு கேள்வியையாவது கேட்டீர்களா?” என்றார். மேலும் கார்த்தி சிதம்பரத்தை விசாரித்த போது ஒரு கேள்வியைக் கூட இது தொடர்பாக சிபிஐ கேட்கவில்லை. எந்த ஒரு வங்கிக் கணக்கிலும் கார்த்தி சிதம்பரத்தின் கையெழுத்து இருப்பதாகக் காட்டப்பட்டால் அவரை அன்னியச் செலவணிச் சட்டம் மற்றும் கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் விசாரியுங்கள், என்றார் கபில் சிபல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x