Published : 01 Mar 2023 06:37 AM
Last Updated : 01 Mar 2023 06:37 AM
போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் ஆன்-லைனில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறார் ஆபாசப் படங்களை வெளியிட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மையம் கண்டறிந்துள்ளது. இந்த வழக்குகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய காணாமல் போன மற்றும் ஏமாற்றப்பட்ட குழந்தைகளுக்கான மையம் (என்சிஎம்இசி) அண்மையில் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆய்வை நடத்தியது.
அதில் அந்த மாநிலத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்-லைனில் சிறார் ஆபாசப் படங்களை வெளியிடுதல், ஆன்-லைனில் பாலியல் தூண்டுதல் தொடர்பான நிகழ்வுகளை நடத்துதல் போன்ற செயல்களை செய்து வருவதாக என்சிஎம்இசி தெரிவித்துள்ளது.
இதில் இந்தூரில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், போபாலில் 1,000-த்துக்கும் அதிகமானோரும் இந்தச் செயலில் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மத்தியபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் 500 முதல் 600 வழக்குகள் வரை பதிவாகியுள்ளதாகவும் என்சிஎம்இசி தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் சிறார் ஆபாசப் படங்களை ஆன்-லைனில் வெளியிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த விவரங்களை மத்திய பிரதேச போலீஸாருக்கு என்சிஎம்இசி அளித்துள்ளது. மேலும் மத்திய புலனாய்வு அமைப்பிலிருந்தும், சைபர்டிப்லைன் அமைப்பிலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து சிறார் ஆபாசப்படங்களை ஆன்-லைனில் வெளியிடும் 4 ஆயிரம் பேர் விரைவில் கைதாக வாய்ப்புள்ளத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படும் நபர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட தலைமையகத்துக்கு போலீஸார் அனுப்பியுள்ளனர். விரைவில் கைது நடவடிக்கை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய பிரதேச மாநில சைபர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வழக்குகள் தொடர்பாக முதலில் 4 ஆயிரம் பேர் விரைவில் கைதாகவுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்து, இங்கு ஆன்-லைனில் வெளியிடுகின்றனர். மேலும் அவை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரப்பப்படுகிறது.
சிறார் ஆபாசப் படங்களைத் தடுக்கும் டிராக்கர் வசதி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளது. அதுபோன்ற சாஃப்ட்வேர் நமக்கும் தேவை. அப்போதுதான் இவற்றைத் தடுக்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
12 வயது மற்றும் அதற்கு கீழேயுள்ள சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை 2017-ம் ஆண்டு மத்தியபிரதேச அரசு அறிமுகம் செய்து சட்டமாக்கியது. அதன்பின்னர் அதுபோன்ற 72 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை மத்தியபிரதேசத்தில் உள்ள நீதிமன்றங்கள் வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT