Published : 28 Feb 2023 06:23 PM
Last Updated : 28 Feb 2023 06:23 PM

அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும், “அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் கடமைப்பட்டிருக்கிறார்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில், பஞ்சாப் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 3-ம் தேதி கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை வழங்கியதாகவும், ஆனால் சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்த ஆளுநர் முயல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கெனவே வெளியிட்டுவிட்டதாகவும், எனவே, இந்த வழக்கு அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டார்.

''சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டாலும், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்தும் விருப்ப உரிமை ஆளுநருக்குக் கிடையாது. இந்த விவகாரத்தில், ஆளுநர் சட்ட ஆலோசனை கேட்பது இதற்கு முன் நடந்தது கிடையாது. ஆளுநரும் முதல்வரும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள். அதற்கு ஏற்ற பண்பை கொண்டிருக்க வேண்டும்.

அதேநேரத்தில், முதல்வர் பகவந்த் மான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை தனது ட்விட்டர் பக்கத்திலும், ஆளுநருக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் ஆளுநரும் முதல்வரும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆளுநர் கேட்கும் விவரங்களை அளிக்க மாநில அரசு கடமைப்பட்டிருக்கிறது. அதேபோல், அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் கடமைப்பட்டிருக்கிறார்'' என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x