

இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடையும் மூன்று மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை, காலியாக இருந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இப்போது நிறைவடைந்திருக்கிறது. வாக்குகள் மார்ச் மாதம் 2-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. இதில், திரிபுராவிலும் நாகாலாந்திலும் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றும், மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க, இம்மாநில தேர்தலுடனேயே தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா, அடுத்த தேர்தல் திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. கர்நாடகா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், அம்மாநிலத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறலாம்.
நுழைவாயில்... - கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக - 104, காங்கிரஸ் - 80, மதசார்பற்ற ஜனதாதளம் - 37 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. தற்போது அங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் எல்லாம் பொதுத்தேர்தலுக்கான நாடிப் பிடிக்கும் டீசர் நிகழ்வுகள் என்பதால் மாநிலத் தேர்தல்களில் தேசிய கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடக்க இருக்கும் கர்நாடகா தேர்தலிலும் கவனம் பெறுகிறது.
தக்கவைக்கவும் தட்டிப்பறிக்கவும் தீவிரம்: அகண்ட பாரத கனவில் இருக்கும் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே தென்மாநிலம் கர்நாடகா மட்டுமே. தென்மாநிலங்களில் காலூன்றும் கட்சியின் நோக்கத்திற்கு ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏற்கெனவே ஆட்சியில் இருந்திருப்பதாலும், பொதுத் தேர்தலுக்கு முன்பாக சரிந்து வரும் கட்சியின் பிம்பத்தை சரி செய்யவும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தக் காரணங்களினால் கர்நாடகா தேர்தல் - 2023 கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மேற்சொன்ன காரணங்களால் இரண்டு தேசிய கட்சிகளும் தொடர்ந்து தேர்தல் பணியாற்றி வருகின்றன.
2 மாதங்களில் 5 முறை பிரதமர் பயணம்: தேவையின் தீவிரம் பொறுத்து இந்த பிரச்சாரப் போட்டி பயணத்தில் பாஜக கொஞ்சம் முந்தியே இருக்கிறது. குஜராத் தேர்தலின்போது பிரதமர் மோடி அடிக்கடி அங்கு சென்றதைப் போல, கர்நாடகாவிற்கும் பிரதமர் மோடி அடிக்கடி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2 மாதங்களில் 5 முறை கர்நாடகாவிற்கு சென்றுள்ள பிரதமர் அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
ஜனவரி 12-ம் தேதி ஹூப்ளி பகுதியில் நடந்த 26-வது தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அதனைத் தொடங்கி வைத்தார். அடுத்து ஜனவரி 19-ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் உள்ள யாதகிரி, கல்புர்கி ஆகிய மாவட்டங்களில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர், பாசனம் உள்ளிட்ட ரூ 10 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார். பிப்ரவரி 6ம் தேதி, இந்திய எரிசக்தி வாரத்தை தொங்கிவைத்து, ஆசியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை கர்நாடகாவின் துமகூரு பகுதியில் திறந்துவைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் "மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் அது எந்த அளவு திறனுடன் செயலாற்றும் என்பதற்கு இந்த தொழிற்சாலை ஓர் உதாரணம். திறமையும் புதுமையும் நிறைந்த இளைஞர்களைக் கொண்ட மாநிலம் கர்நாடகா. ஆளில்லா விமானம் முதல் தேஜாஸ் போர் விமானம் வரை கர்நாடகாவின் உற்பத்தித் திறனை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடகா இருப்பதற்கு டபுள் இன்ஜின் அரசு (மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அரசு) இருப்பதுதான் காரணம்'' என்றார்.
இந்த நிலையில் நேற்று( பிப்.27) கர்நாடகாவின் ஷிமோகாவில் ரூ.450 கோடியில் தாமரை வடிவத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் இரட்டை இன்ஜின் அரசு (மத்திய - மாநில பாஜக அரசு) இருப்பதால் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன என்று மீண்டும் வலியுறுத்தினார்.
மோடி முகமும் உள்ளூர் ஊழலும்: குஜராத்தைப் பொறுத்த வரையில் மோடி முகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பொதுத்தேர்தலிலும் மோடி முகத்தை முன்னிறுத்திய பாஜக பணியாற்றி வரும் நிலையில், கர்நாடகாவிலும் அந்த யுக்தியை பாஜக முயற்சித்து பார்க்கிறது. ஆனாலும் கர்நாடகாவைப் பொறுத்தவரை மோடியை விட உள்ளூர் பாஜக பிரமுகர்களின் செயல்பாடுகளே முந்திவந்து நிற்கும்.
கர்நாடக மாநில பாஜகவின் பெரும் தூணாக பார்க்கப்படுபவர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இந்த முறை முதல்வராக அவர் போட்டியிட்டடால் வெற்றி உறுதி. ஆனால், சமீபத்தில் தீவிர அரசியலில் இருந்து விலகப்போவதாக எடியூரப்பா அறிவித்திருக்கிறார். இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஆளும் மாநில பாஜகவினர் சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஊழல் குற்றச்சாட்டில் முதல்வரின் பெயரும் அடிபடுவதும், 40 சதவீத கமிஷன் ஆட்சி என முதல்வரை எதிர்கட்சிகள் விமர்சித்து வருவதும் பாஜகவின் இமேஜுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இவை தவிர, பெருகி வரும் வகுப்புவாத பிரச்சினை, லவ் ஜிகாத், ஹிஜாப் விவகாரம், இந்து அமைப்பு போன்றவையும் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திரும்பலாம்.
உள்ளாட்சியின் அலட்சியம்: கட்சியினரின் அடாவடி ஒருபுறம் என்றால், பிபிஎம்பி எனப்படும் பெங்களூரு மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதில் அலட்சியமான போகும் ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கலாம். இந்த ஆண்டு மழையில் பெங்களூரு தெருக்களில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்ய ரூ.7,121 கோடி செலவு செய்திருப்பது எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இத்தனை தடைகள் முன்னிற்கும் நிலையில், தேர்தல் பணிகளின் ஒரு அங்கமாக, பாஜக கர்நாடகா மாநிலத்திற்கான கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது.
கிணற்றில் போட்ட கல்லாக காங்கிரஸ்: பாஜக தேர்தலுக்கான பிரச்சார வியூகங்களை வகுத்துவரும் நிலையில், எதிர்கட்சியான காங்கிரஸ் யாத்திரைகள் மட்டுமே நடத்தியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தினார். தமிழகத்தில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா வழியாக கர்நாடகாவில் நுழைந்தது. ராகுலின் காந்தியின் யாத்திரையில் பாஜக ஆளும் முதல் மாநிலமாக கர்நாடகா இருந்தது. இதனால் காங்கிரஸின் பலத்தை நிரூபிக்க அங்கு பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கர்நாடகாவில் தான் முதல் முதலாக இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் கர்நாடகாவில் நடந்த யாத்திரையில் இணைந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் ஆளும் கட்சியின் குறைகளைச் சொல்லி, மக்கள் குரல் என்ற யாத்திரையை நடத்தியது. தேங்கியிருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்த இந்த யாத்திரைகள் போதுமானதாக இருந்தாலும் தேர்தல் வெற்றிக்கு இவை போதுமானதாக இருக்கப்போவதில்லை.
களமிறக்கப்படும் இலவச கலச்சாரம்: அரசியல் கட்சிகளின் இமேஜ்கள் பிரச்சாரங்கள் ஒருபுறம் இருக்க, கர்நாடகாவின் இந்த முறை தேர்தலில் இலவசங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பரிசுப் பொருள்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனால் நடத்தை விதிகளும் அமலில் இல்லை. இதனால் பிரஷர் குக்கர் முதல் பரிசு பொருள்கள், எல்ஐசி பிரிமீயம் முதல் திருப்பதி, ஷீரிடி யாத்திரை வரை அரசியல் கட்சித் தலைவர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என பசவராஜ் பொம்மை அறிவித்தார். தேர்தலை முன்வைத்து ஆளும் பாஜகவும், எதிர்கட்சியான காங்கிரசும் பல்வேறு இலவசங்கள், நலத்திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்து வருகின்றன. இவை அனைத்தும் கர்நாடகாவில் வாக்காளர்களை கவர்ந்து, கட்சிகளின் வெற்றிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
"கட்சிகளின் இலவச அறிவிப்புகள் ஒரு புறம் இருந்தாலும், கர்நாடகாவில் இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அதனால், கர்நாடகா வாக்காளர்கள் அவர்களின் (பாஜக, காங்கிரஸ்) முந்தைய செயல்பாடுகளை எடை போட்டுப் பார்ப்பார்கள். அதன்படியே முடிவெடுப்பார்கள்" என்கிறார் பெங்களூருவிலிருந்து செயல்பட்டுவரும் அரசியல் விமர்சகர் சந்தீப் சாஸ்திரி.
மேலும் அவர் கூறுகையில், "கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் நாட்டின், மாநிலத்தின் பொருளாதாரச் சூழலில் பெரிய மாற்றங்கள் நடந்துள்ளன. கரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் மக்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்த இலவச அறிவிப்புகள் கர்நாடகா தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இமாச்சல பிரதேச தேர்தலின் கடைசி சுற்றில், ஏழை மக்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் எந்த அளவுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தின என்பது தெளிவாகவே தெரிந்தது" என்றார்.
மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனாலும், இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், கட்சிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்கு கேட்பதற்கான நேரம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதனால் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் மூலமே வாக்காளர்களைச் சென்றடைய முடியும். சமீப காலங்களில் பெண் வாக்களர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பிரஷர் குக்கர், இலவச கேஸ் போன்றவைகள் வாக்காளர்கள் எண்ணிக்கையில் கணிசமாக உள்ள பெண்வாக்களர்களையே குறிவைக்கின்றன. காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் இவர்கள் மீது கவனம் செலுத்துகிறது" என்கிறார் மற்றொரு அரசியல் விமர்சகர் சத்திய மூர்த்தி.
யாருக்கு வெற்றி? - 40 சதவீத கமிஷன் சர்க்கார் என்ற ஆளும் பாஜக மீதான விமர்சனம் மாநில பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். இந்த நிலையில் எதிர்கட்சிகளை சரியானபடி ஒருகிணைத்தால் காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியைப் பெறலாம் என்று பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். முடிவு மக்கள் கையில்!