டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது எதிரொலி: நாடுதழுவிய அளவில் ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

மணிஷ் சிசோடியா
மணிஷ் சிசோடியா
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

டெல்லியின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிபிஐ முன்பு ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை ஏற்று காலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு வந்த மணிஷ் சிசோடியாவிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில், அவரிடமிருந்து கிடைத்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து இன்று (பிப்.27) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த இருப்பதாக ஆம் ஆத்மியின் கட்சியின் தேசிய செயலாளர் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கை காரணமாக சிபிஐ அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

அதேபோல், டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் முன்பும் நண்பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

மணிஷ் சிசோடியா கைது குறித்து, "இது கேவலமான அரசியல். மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

"லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்கிய மணிஷ் சிசோடியாவை பாஜகவின் சிபிஐ கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜனநாயகத் துக்கு இன்று கருப்பு தினமாகும்" என்று ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சிபிஐ -ஆல் கைது செய்யப்பட்ட டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, இரவு முழுவதும் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். மருத்துவப் பரிசோதனைகளுக்கு பின்னர் இன்று மதியம் 2 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in