இந்தியாவின் UPI உலக நாடுகளை ஈர்க்கிறது: பிரதமர் மோடி

இந்தியாவின் UPI உலக நாடுகளை ஈர்க்கிறது: பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பமான UPI உலக நாடுகளை ஈர்த்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தும் மான் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. பிரதமரின் இந்த 98வது மான் கி பாத் உரையை, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இருந்தவாறு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கேட்டனர். இந்த வானொலி உரையில் பிரதமர் மோடி பேசியதாவது: ''டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பமான UPI உலக நாடுகளை ஈர்த்து வருகிறது.

இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இடையே பணபரிவர்த்தனை நிகழ்த்துவதற்கான திட்டம் சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. தற்போது இரு நாட்டு மக்களும் தங்கள் மொபைல் போன் மூலமாகவே பணபரிவர்த்தனையில் ஈடுபட முடியும்.

இதேபோல், இ சஞ்சீவனி செயலி, இந்திய மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன்மூலம், மருத்துவ ஆலோசனைகளை மக்கள் வீட்டில் இருந்தபடியே பெற முடிகிறது. இந்த செயலி மூலம் இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொழில்நுட்பங்களை இந்தியா எவ்வாறு வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றி இருக்கிறது என்பதற்கு இவை மிகச் சிறந்த சான்றுகளாக உள்ளன.

இந்திய பொம்மைகள் சர்வதேச அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. பொம்மைகள் தொடர்பாக நான் மான் கி பாத் உரையில் பேசும்போது, சக இந்தியர்கள் அதனால் உற்சாகமடைகிறார்கள். தற்போது இந்திய பொம்மைகளுக்கான தேவை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.'' இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது மான் கி பாத் உரையில் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in