Published : 26 Feb 2023 06:28 AM
Last Updated : 26 Feb 2023 06:28 AM

பாகிஸ்தானை பிரதமர் நரேந்திர மோடி மீட்பார் - இந்திய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் கருத்து

ஏ.எஸ்.துலாத்

கொல்கத்தா: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்த நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு கணிசமாக குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள், கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை நீடிக்கிறது.

இதன் காரணமாக ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.200, ஒரு லிட்டர் பால் ரூ.200, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.900 விலையில் விற்கப்படுகிறது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல்வேறு நகரங்கள் இரவில் இருளில் மூழ்குகின்றன. தொழில் துறை முற்றிலுமாக முடங்கி வேலைவாய்ப்பின்மை பிரச்சினை பூதாகாரமாக வெடித்திருக்கிறது.

இதன்காரணமாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த மக்கள் தங்களை இந்தியாவோடு இணைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இலங்கையை காப்பாற்றியது போன்று பாகிஸ்தானையும் காப்பாற்ற வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமூக வலைதளங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்திய உளவு அமைப்பான 'ரா' வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ரஷ்யா, சீனா, ஈரான் ஆகியவை கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. இது ஆபத்தான கூட்டணி ஆகும். அண்மைகாலமாக இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்புறவு வலுவடைந்து வருகிறது. எனினும் இந்தியாவில் இருந்து வெகுதொலைவில் அமெரிக்கா இருக்கிறது. எனவே அண்டை நாடுகளுடன் இந்தியா சுமுக உறவை பேணுவது அவசியம்.

தற்போது பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. என்னுடைய கணிப்பின்படி இந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவுவார். அந்த நாட்டை மீட்டெடுப்பார்.

வெளிநாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் உதவி பெறுவது கடினம். அந்த நாடு இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கி, வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது.

இவ்வாறு ரா முன்னாள் தலைவர் துலாத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x