

புதுடெல்லி: தெற்கு சீன கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கடல் எல்லை பிரச்சினைகள் உள்ளன. இச்சூழ்நிலையில் தெற்கு சீன கடல் பகுதியில் சுந்தா ஜலசந்தியை கடந்து இந்திய நீர்மூழ்கி கப்பல் சிந்துகேசரி முதல் முறையாக இந்தோனேஷியா சென்றடைந்துள்ளது.
ஆசிய நாடுகளுடன் தொடர்ந்து ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய போர்க் கப்பல்கள் பல இந்தோனேஷியா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு சென்றுள்ளன. ஆனால் நீர்மூழ்கி கப்பல் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை.
மூவாயிரம் டன் எடையுள்ள டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பலான சிந்துகேசரி கடந்த 2018-ம் ஆண்டு ரூ.1,197 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. தற்போது நீண்டதூர பயணம் மேற்கொண்டு தனது பலத்தை சிந்துகேசரி நிருபித்துள்ளது. பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் 21 பேருக்கு, நாக்பூரில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பயிற்சியை இந்தியா சமீபத்தில் வழங்கியது. இதையடுத்து இந்திய நீர்மூழ்கி கப்பல் நல்லெண்ண பயணமாக இந்தோனேஷியா சென்றடைந்துள்ளது.