Published : 04 Sep 2017 08:06 AM
Last Updated : 04 Sep 2017 08:06 AM

இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்புத் துறைக்கு அமைச்சரான 2-வது பெண்: நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த கவுரவம்

நாட்டின் முதல் முழு நேர பாதுகாப்பு அமைச்சரான பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இந்திரா காந்திக்குப் பின் ராணுவ அமைச்சராகும் இரண்டாவது பெண்ணும் இவர்தான்.

வர்த்தக தொழில்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு ராணுவ அமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் நாட்டின் முதல் முழு நேர பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இதற்கு முன் 1970-களில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி ராணுவ அமைச்சக பொறுப்பையும் கவனித்து வந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு ராணுவ அமைச்சர் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது பெண் நிர்மலா சீதாராமன்.

வர்த்தக தொழில்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது, அவர் ஏற்கெனவே வகித்த வர்த்தக தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டிருப்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், ‘‘ராணுவ அமைச்சர் பதவிக்கு நிர்மலா சீதாராமன் மிகவும் தகுதியானவர். ஏற்கெனவே அளிக்கப்பட்ட பொறுப்பில் தனது திறமையை அவர் நிரூபித்துள்ளார். இப்போது ராணுவ அமைச்சர் பொறுப்பையும் திறம்படச் செய்வார். அவர் தனக்கான இடத்தை பெற்றுள்ளார். அவரது நியமனம் பெண்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே சிறப்புமிக்கது. உலகத்துக்கும் இந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம் பெற்றுள்ளனர். இரு பெண்களுமே தங்கள் தகுதியையும் திறமையையும் நிறுவி உள்ளனர்’’ என்றார்.

நிர்மலா சீதாராமன் மதுரையைச் சேர்ந்தவர். திருச்சியில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ.பட்டப் படிப்பும் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x