Last Updated : 13 Sep, 2017 09:25 AM

 

Published : 13 Sep 2017 09:25 AM
Last Updated : 13 Sep 2017 09:25 AM

கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம்: பெங்களூருவில் மாபெரும் கண்டன பேரணி: சீதாராம் யெச்சூரி, மேதா பட்கர் உள்ளிட்டோர் பங்கேற்பு

மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து, பெங்களூருவில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமூக ஆர்வலர் மேதா பட்கர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவா எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் (55) கடந்த 5-ம் தேதி பெங்களூருவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கர்நாடக சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கவுரி படுகொலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து செண்ட்ரல் கல்லூரி மைதானம் வரை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்லூரி மாணவர்கள், முற்போக்கு அமைப்பினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது கவுரி படுகொலையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இடையிடையே தெரு நாடகமும், கண்டன பாடல்களும் பாடப்பட்டன.

இந்த பேரணி சென்ட்ரல் கல்லூரி மைதானத்தை அடைந்ததும், அங்கு கண்டன பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமூக ஆர்வலர் மேதா பட்கர், கன்னட எழுத்தாளர் தேவனூர் மகாதேவா, உனா போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜிக்னேஷ் மேவானி, பத்திரிகையாளர்கள் சாய்நாத், சித்தார்த் வரதராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். மேலும் கவுரியின் தாய் இந்திரா, சகோதரி கவிதா, சகோதரர் இந்திரஜித் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது சீதாராம் யெச்சூரி பேசும்போது, “கவுரி லங்கேஷின் படுகொலையின் மூலம் மாற்று கருத்துக்கு இங்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் விரும்பும் அனைவரும் இதை எதிர்க்க வேண்டும். அமைதியை விரும்பும் அனைவரும் ஒரே அணியில், ஒரே குரலில் ஒலிக்க வேண்டும். இப்போது நாம் ஓங்கி குரல் கொடுக்காவிட்டால், இன்னும் நிறைய முற்போக்கு சிந்தனையாளர்களை கொன்றுவிடு வார்கள்.

இந்தியா பல்வேறு விதமான சித்தாந்தங்களும், மக்களும் வாழும் நாடு. இந்த பன்முகத் தன்மைதான் நமது முக்கிய அடையாளம். இது அழிந்து போக விடக்கூடாது. பன்முகத் தன்மை காப்பாற்றப்பட வேண்டுமானால் தொடர் உரையாடலும், விவாதமும் தேவை. ஆக்கப்பூர்வமான விவாதத்தின் மூலமாகவே உண்மையான, மக்களுக்கு நல்வழி காட்டும் சித்தாந்தத்தை கண்டடைய முடியும்.

ஒற்றை சிந்தனை எனும் சாத்தானை நாட்டின் மீது ஏவி விடுகிறார்கள். ஒற்றை சித்தாந்த இந்தியா பெரும் ஆபத்தை விளைவிக்கும். அதுதான் காந்தியின் உயிரை காவு வாங்கியது. அதனால்தான் சர்தார் வல்லபாய் படேல், சங் பரிவார் அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார். அதை ஒடுக்க தான் அம்பேத்கர், பன்முகத்தன்மை கொண்ட இந்திய அரசமைப்பை வரைந்தார். அம்பேத்கரின் சிந்தனையில் உருவான அரசமைப்பு சட்டத்தையும், இந்நாட்டையும் சாத்தானிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்” என்றார்.

இந்தக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x