Published : 10 May 2017 07:34 AM
Last Updated : 10 May 2017 07:34 AM

உடல் பருமன் அச்சம் காரணமாக பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை: மகாராஷ்டிர அரசு உத்தரவு

குழந்தை பருவ உடல் பருமன் மற்றும் அது சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதை அடுத்து மகாராஷ்டிராவில் பள்ளி கேன்டீன்களில் நொறுக்கு தீனிகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு பிறப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட அரசின் தீர்மான அறிக்கையில், ‘‘அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை (ஹெச்.எஃப்.எஸ்.எஸ்) கொண்ட உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. சொல்லப் போனால் உடல்பருமன் ஏற்படுவதற்கும், அது சார்ந்த பிற நோய்கள் உருவாகவும் தான் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பள்ளி முதல்வர்கள் இந்த தடை அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நொறுக்கு தீனிகளுக்கு மாற்றாக சப்பாத்தி, சாதம், காய்கறிகள், கோதுமை உப்புமா, கிச்சடி, பாயாசம், இட்லி, சாம்பார் வடை, இளநீர், எலுமிச்சை சாறு ஆகியவை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் கேன்டீன்கள் இயங்கவில்லை என்றாலும், கடைகளில் இருந்து வரவழைக்கப்பட்டு உணவு இடைவேளையின்போது மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதையும் பள்ளிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசின் இந்நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரெமிடியோஸ் கூறும்போது, ‘‘அதிகப்படியான செயற்கை சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களை மனித உடல் ஏற்றுக் கொள்ளாது. இந்த அளவு சர்க்கரை வெகு எளிதில் கொழுப்பாக மனித உடலில் சேர்ந்து விடும். இன்சுலின் சுரப்பும் பாதிக்கப்பட்டு நீரழிவு நோயை உண்டாக்க கூடும்’’ என்றார்.

இந்திய நீரழிவு சங்க துணைத் தலைவர் ஜெக்மீத்தும் இம்முடிவை வரவேற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x