எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே ஐ.நா. வாகனத்தை இந்தியா தாக்கியதா? - பாகிஸ்தான் புகாருக்கு ஐ.நா. மறுப்பு

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே ஐ.நா. வாகனத்தை இந்தியா தாக்கியதா? - பாகிஸ்தான் புகாருக்கு ஐ.நா. மறுப்பு

Published on

‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே, ஐ.நா. வாகனம் மீது இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று பாகிஸ்தான் கூறிய புகாரை ஐ.நா. திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே, ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். ‘ஐ.நா. குழுவினர் வாகனத்தில் சென்றபோது, சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, புதன்கிழமை இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது’ என்று பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி பாகிஸ்தான் பத்திரிகைகளில் வெளியானது.

இதையடுத்து புதன்கிழமை இரவே ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பாகிஸ்தான் புகாரை திட்டவட்டமாக மறுத்தார். இதுகுறித்து ஸ்டீபன் கூறியதாவது:

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே ஐ.நா. வாகனம் மீது இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. பாகிஸ்தான் புகாரில் உண்மையில்லை. பாகிஸ்தான் ராணுவ பாதுகாப்புடன் ஐ.நா. கண்காணிப்பு குழுவினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே பிம்பார் மாவட்டத்தில் வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது ஏதோ துப்பாக்கிச் சூடு நடத்தும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால், ஐ.நா. வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஐ.நா. குழுவினர் யாரும் காயம் அடையவில்லை.

இவ்வாறு ஸ்டீபன் கூறினார்.

முன்னதாக இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி நடந்ததால், கடந்த செவ்வாய்க்கிழமை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள பாகிஸ்தான் பகுதியில் இருந்த முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. ஆனால், இந்தியாவின் நடவடிக்கையை பாகிஸ்தான் மறுத்தது. இதுதொடர்பாக போலி வீடியோவையும் வெளியிட்டது என்று இந்திய ராணுவத்தினர் உறுதியாகத் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in