

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு (82) சிறப்பு நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியது.
மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக வீரபத்ர சிங் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர் பான வழக்கை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங் உட்பட 9 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சுமார் 500 பக்கங்களைக் கொண்ட அதில், “மத்திய அமைச்சராக இருந்தபோது வீரபத்ர சிங் ரூ.10 கோடி சொத்து சேர்த்துள்ளார். இது அவரது வருமானத்தைவிட 192 சதவீதம் அதிகம்” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீரபத்ர சிங் உட்பட அனைவரும் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.