

வெளிநாட்டு நிதி ஆதாரம் குறித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடை விவரங்களை அளிக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் அசுதோஷ் நேற்று கூறும்போது, “எங்கள் கட்சியின் நிதி ஆதாரம் குறித்து, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் பிறகு நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சி தவறு எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே உள்துறை அமைச்சகம் தற்போது நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தவிர வேறு எதுவும் இல்லை” என்றார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி உண்மையை மறைப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.