

காஷ்மீர் விவகாரத்துக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காணும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இமயமலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ள இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்திய- சீனா எல்லைப் பகுதியில் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சிக்கிம் வந்தார்.
3 நாள் பயணமாக இங்கு வந்துள்ள அவர், 5 மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் இந்திய- சீனா எல்லைப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்புப் பணிகள் (சாலைகள், பாலங்கள்) மற்றும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும், பாதுகாப்பு நிலவரம் குறித்தும் ராஜ்நாத் சிங் தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது.
முன்னதாக, ராஜ்நாத் சிங்குக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கு அவர் பேசியதாவது:
''இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ஆனால், இது ஒருபோதும் நடக்காது. காஷ்மீர் எங்களுடைய மாநிலம். அதில் வசிக்கும் அனைவரும் நம்முடையவர்கள். காஷ்மீர் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிரந்தரத் தீர்வு காணும்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்றபோது, விழாவில் கலந்துகொண்ட பாகிஸ்தான் உட்பட பக்கத்து நாட்டு தலைவர்களிடம், இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேண விரும்புவதாகக் கூறியது. ஆனால், இந்தியாவின் மீதான பார்வையில் இருந்து பாகிஸ்தானிடம் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக இந்தியாவைச் சீர்குலைக்க அந்நாடு விரும்புகிறது.
இந்நிலையில் இருந்து பாகிஸ்தான் மாறும் என நாம் நம்புகிறோம். அப்படியும் அவர்கள் மாறவில்லை என்றால் மாற்றிக் காட்டுவோம். உலகமயமாக்கலுக்குப் பிறகு எந்த ஒரு நாடும் மற்ற நாட்டைச் சீர்குலைக்க முடியாது என்பதை சர்வதேச சமூகம் மறந்துவிடாது'' என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
இதன்பிறகு அவர், எல்லையில் உள்ள நதுலா சோதனைச் சாவடி, இந்திய- திபெத் போலீஸ் சோதனைச் சாவடி, இந்திய-நேபாள சோதனைச் சாவடிகளைப் பார்வையிட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.