

ஸ்பெயினில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபரை மேட்ரிட் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளில் பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, 2-வது கட்டமாக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மோக்க்ளோ அரண்மனையில் அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவை பலப்படுத்துவது, சர்வதேச அரசியல் நிலவரம், தீவிரவாத ஒழிப்பில் இணைந்து செயல்படுவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில் இணையதள பாதுகாப்பு, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தண்டனை கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது மற்றும் விமானப் போக்குவரத்து தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி கூறும்போது, “ரஜோய் தலைமையிலான ஸ்பெயின் அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே, உள்கட்டமைப்பு, சுற்றுலா, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஸ்பெயின் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்” என்றார்.
கடந்த 1988-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்பெயின் சென்றிருப்பது இதுவே முதல் முறை. ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் 7-வது பெரிய வர்த்தக பங்குதாரராக உள்ளது. கடந்த ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் சுமார் ரூ.34 ஆயிரம் கோடியாக உள்ளது.
மேட்ரிட் நகரின் புறநகர் பகுதியில் உள்ள பலாசியோ அரண்மனையில் ஸ்பெயின் மன்னர் 6-ம் பிலிப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இதையடுத்து ஸ்பெயின் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை இன்று சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.