Published : 22 Feb 2023 06:18 PM
Last Updated : 22 Feb 2023 06:18 PM
புதுடெல்லி: சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கணிசமான எம்எல்ஏக்கள் விலகி பாஜக-வில் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது.
இதனிடையே சிவசேனாவின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே, ஷிண்டே அணிகள் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த ஆணையம், சிவசேனா பெயர், கட்சியின் வில் அம்பு சின்னம் ஷிண்டே அணிக்கு என்று கடந்த 17-ம் தேதி அறிவித்தது.
சிவசேனா கட்சிக்கு ரூ.186 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் இருக்கின்றன. அதோடு வங்கிக் கணக்குகளில் ரூ.148.46 கோடி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிவசேனா கட்சியின் சொத்துகள், பணம் முழுவதும் தற்போது ஷிண்டே அணிக்கு செல்கிறது.
இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று(பிப். 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சிவ சேனா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், ''வழக்கு விசாரணை தொடங்கியுள்ள இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் முன் அவர்கள் (ஷிண்டே தரப்பு) வெற்றி பெற்றிருக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் முடிவின் அடிப்படையில் ஷிண்டே தரப்பினர் ஆட்சேபகராமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கபில் சிபல் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். எனினும், அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, ஆட்சேபகரமான நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டால் அது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண முடியும் என குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் ஷிண்டே தரப்பினர் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் இடைக்கால உத்தரவுப்படி, உத்தவ் தாக்கரே பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என்ற பெயரையும் ஜோதி சின்னத்தையும் தொடர அனுமதிக்க வேண்டும் என கபில் சிபல் வைத்த வேண்டுகோளை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT