

கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சி மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விருந்தில் இதுதொடர்பாக ஆலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற பின், நரேந்தர மோடி அரசு மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு இடையிலான சந்திப்புகள் மிகவும் குறைந்து விட்டன.
அமைச்சர்களை சந்திக்க வேண்டி, கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களின் அமைச்சகங்களை தேடிச் செல்லும் சூழல் நிலவுகிறது. அப்படியே போனாலும் அவர்களை சில அமைச்சர்கள் சந்திப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதைச் சரி செய்து, இருதரப்பினருக்கும் இடையிலான சந்திப்புகளை சிறக்க வைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘‘இனி கட்சிக்காரர்களை சந்திப்பதற்காக அமைச்சர்கள் மாதம் ஒருமுறை கட்சியின் தலைமையகத்திற்கு செல்வார்கள். அப்போது தங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக கட்சித் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் அமைச்சர்களை எவ்விதத் தடையுமின்றி சந்திக்கலாம் என விருந்தின்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
பாஜகவின் தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் தலைமையில், டெல்லி அசோகா சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் கலந்து கொண்டார்.
இவர்களுடன் பெரும்பாலான பாஜக எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் அழைப்பிதழ்களின் பேரில் கலந்து கொண்டனர். இதில் பத்திரிகையாளர்கள் உட்பட வேறு எவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அந்த அலுவலகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதன்முறையாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விருந்தில், புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்தும், டெல்லி, மகராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங் களில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை சந்திப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரதமராக பதவி ஏற்ற பின் மோடி பாஜக அலுவலகத்துக்கு இரண்டாவது முறையாக விஜயம் செய்திருக்கிறார். இதற்கு முன்பு சாலை விபத்தில் இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த மாதம் இங்கு வந்திருந்தார்.