

நிர்பயா வழக்கு போன்று பிற பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபணமான ராம் சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் இளம் குற்றவாளி என்பதால் ஒருவர் சிறார் பள்ளியில் மூன்று ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்டு விடுதலையானார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்க்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகளின் இத்தீர்ப்பு தொடர்பாக வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களிடத்திலும் தி இந்து தமிழ் இணைய தளம் சார்பாக கருத்து கேட்டறிந்தது. அதன் விவரம்,
பிற்போக்குத்தனமான கருத்துகளை ஆதரிக்கும் சமூகத்தின் ஒரு பகுதிக்கு அளிக்கப்பட்ட தண்டனை
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி: "பொதுவாக இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இந்த வழக்கில் நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டைதான் எடுத்துள்ளன. பொதுவாக ஜனநாயக மாதர் சங்கத்தை பொறுத்தவரை மரண தண்டனைகள் தேவை இல்லை என்ற கருத்துதான் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளில் மரண தண்டனைதான் அதிகபட்ச தண்டனை. அந்தவகையில் இந்த தண்டனையை வரவேற்கிறேன்.
இரண்டாவது இவ்வழக்குக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. வர்மா கமிஷன் அதன்பிறகு வந்த பாலியல் வன்முறை குறித்த சட்டங்களில் சில முக்கியமான திருத்தங்கள், பாலியல் குற்றங்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் பொது மக்கள் மத்தியில் கண்டனம் இவை எல்லாம் சேர்ந்த ஒரு வழக்காக இவ்வழக்கு பார்க்கப்படுகிறது.
ஆனால் இம்மாதிரியான வழக்குகளிலும் குற்றவாளிகள் சிறையிலிருந்து நேர்காணல் கொடுத்தபோது, பாலியல் வன்முறைகள் நடப்பதற்கு பெண்தான் காரணம். பெண்கள் ஏன் இரவில் நடமாடுகிறார்கள். பெண்கள் இருக்க வேண்டிய இடம் வீடு. நாங்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும்போது அப்பெண் ஏன் எங்களை எதிர்த்திருக்கக் கூடாது போன்ற பிற்போக்குத்தனமான கருத்துகளை அக்குற்றவாளிகள் தங்கள் நேர்காணலில் முன்வைத்தார்கள். இது அக்குற்றவாளிகளின் கருத்தாக மட்டும் எனக்கு தோன்றவில்லை.
பெண் மீதான பாதிப்புக்கு பெண்தான் காரணம் என்று கூறும் சமூகத்தின் ஒரு பிரிவாகவே இக்கருத்து பார்க்கப்படுகிறது. நிர்பயா வழக்கில் வழக்கப்பட்ட இத்தண்டனை வெறும் குற்றவாளிகளுக்குரிய தண்டனையாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. அக்குற்றவாளிகளின் பிற்போக்குத்தனமான கருத்துகளை ஆதரிக்கும் சமூகத்தின் ஒரு பகுதிக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகவே பார்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மோசமான பாலியல் வழக்குகளை (அரியலூர் நந்தினி வழக்கு உட்பட) தமிழக போலீஸார் மிக மெத்தனமாக கையாள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பாலியல் வழக்குகளுக்கு சிபிசிஐடி விசாரணை தேவை என்று சமூக செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்திடம் முறையிடும் நிலைமைதான் வருகிறது.
எனவே, நிர்பயா வழக்கிலிருந்து தமிழக காவல் துறை கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் உள்ளன" என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் இம்மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்
வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது: "நிர்பயா வழக்கைப் பொறுத்தவரை அவ்வழக்குக்கு எது அதிகபட்ச தண்டனை என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறதோ அத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக தூக்கு தண்டனை வேண்டாம் என்பது மனித உரிமையாளர்களின் கோரிக்கை. ஆனால் மரண தண்டனை நடைமுறையில் இருக்கக்கூடிய நாட்டில் மரண தண்டனை பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதிக்காக போராடுபவர்களுக்கு மனத்தெம்பை அளிக்கக் கூடியது.
ஆனால் இம்மாதிரியான நீதி நடவடிக்கை எல்லா வழக்குகளுக்கும் விரைவாகவும் உறுதியாகவும் நீதி கிடைப்பதற்கு உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் இம்மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்
உதாரணத்திற்கு குஜராத் கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்கார சம்பவம் மற்றும் அரியலூர் நந்தினி பலாத்காரம் வழக்குகளுக்கும் இம்மாதிரியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நீதி கிடைத்ததைவிட நீதி எல்லாருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைக்கும்" என்று தெரிவித்தார்.