

கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே வான்பாதையில் செல்ல விருந்த இந்திய பிரதமர் மோடியின் விமானம் அதிர்ஷ்டவசமாக தப்பியது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி யாளர்களின் கட்டுப்பாட்டி லுள்ள கிழக்கு உக்ரைனின் வான் பகுதியில் வியாழக்கிழமை மாலை பறந்து கொண்டிருந்த மலேசிய பயணிகள் விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப் பட்டது. இதில், விமானத்தில் இருந்த 298 பேரும் உயிரிழந்தனர்.
மோடியின் விமானம்
பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியபோது, அவர் பயணித்த ஏர் இந்தியா-001 விமானம் ஜெர்மனியின் பிராங்ஃபர்ட் நகரில் இருந்து வியாழக்கிழமை 11.22 (கிரீன்விச் நேரம்) மணிக்கு புறப்பட்டது. மலேசிய விமானம் பயணித்த அதே வழியில்தான் மோடியின் விமானமும் பறப்பதாக இருந்தது.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படாமல் இருந்திருந்தால், சம்பவம் நிகழ்ந்த 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் விமான வான்வெளி மண்டலத்தில் (பிளைட் இன்பர்மேஷன் ரீஜிய) பறந்திருக்கும்.
ஆனால், விமானி சாதுர்யமாக யோசித்து பயணத்தடத்தை கருங்கடல் வழியாக மாற்றிவிட்டார்.
உக்ரைன் வான்வெளிப் பகுதியில் வழக்கமாக இரு வழித்தடங்களில் விமானங்கள் பறக்கும். இதில், சிம்ஃபெரோ போல் வழித்தடத்தை உக்ரைன்- ரஷ்யா இரண்டுமே சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் பெரும்பாலான விமானங்கள் பயணிப்பதில்லை.
மேலும், இந்த ஒரே வான்வெளிப் பகுதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்படுவதால், பாதுகாப்பு கருதி இவ்வழித்தடம் தவிர்க்கப்பட்டது.
உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால், அங்கு 30,000 அடிக்கு குறைவான உயரத்தில் பறக்க வேண்டாம் என விமானிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. மேலும், ஐ.நா. விமானப் போக்குவரத்து ஆணையம் லிவைவ் வழித்தடத்தை பயன் படுத்த கடந்த ஏப்ரலில் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியி ருந்தது. ஆகவே, நரேந்திர மோடியின் விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு, மாற்றுப்பாதையில் விமானத்தைச் செலுத்தியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
மலேசிய விமானம் தாக்கப் பட்டதை அடுத்து மேற்கு உக்ரைன் வழியாக பறப்பதைத் தவிர்க்கும்படி விமான நிறுவனங்களுக்கு, இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச விசாரணை
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக சர்வ தேச விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர் களும் வலியுறுத்தியுள்ளனர்.
181 உடல்கள் மீட்பு
சம்பவ இடத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை வரை 181 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்விபத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த 173 பேர், 44 மலேசியர்கள், 28 ஆஸ்திரேலியர்கள், 12 இந்தோனேசியர்கள், 9 பிரிட்டிஷ் காரர்கள், 4 ஜெர்மானியர்கள், பெல்ஜியம் நாட்டவர் 4 பேர், பிலிப்பின்ஸைச் சேர்ந்த 3 பேர், கனடா, நியூஸிலாந்து, ஹாங்காங்கைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மலேசிய தமிழ் பெண்
உயிரிழந்த 15 விமானப் பணியாளர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஞ்சித் சிங் சந்து மற்றும் ஏஞ்சலின் பிரமிளா என்ற மலேசிய தமிழ் பெண் ஆகியோரும் அடங்குவர்.
தவிர, இறந்தவர்களில் 80 குழந்தைகளும் அடங்குவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
‘பக்’ ஏவுகலம் மூலம் ஏவப்பட்ட ஏவுகணைதான் மலேசிய விமானத்தைத் தாக்கியுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து சோகம்
நான்கு மாதங்களுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் சகோதரனை இழந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர், இப்போது சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் தனது மகளையும் இழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேலியன் என்ற பெண்தான் அந்த துரதிர்ஷ்டசாலி. இவரது சகோதரர் ரோப் புரோவ்ஸும் அவரது மனைவியும் 4 மாதங்களுக்கு முன்பு மலேசியாவின் எம்எச் 370 விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானம் நடுவானிலேயே மாயமானது. இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சகோதரனை இழந்த சோகம் மறையும் முன்னதாகவே தனது மகளையும் கேலியன் இழந்துள்ளார். இவரது மகள் மேரி ரீஸ் அவரது கணவர் ஆல்பர்ட் ஆகியோர் மலேசியாவின் எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் உயிரிழந்தனர்.
அச்சுறுத்தல் இல்லை: அமைச்சர் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி பயணித்த ஏர் இந்தியா விமானத்துக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “பிரிக்ஸ் மாநாட்டிலிருந்து திரும்பிய பிரதமர் மோடியின் விமானத் துக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. ஏர் இந்தியா விமானத்தின் பயணத்தகவல்கள் வெளிநாட்டு ரேடார்களிடம் உள்ளது” என்றார்.
கிளர்ச்சியாளர்களின் உரையாடல் பதிவு
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் உரையாடல் பதிவை உக்ரைன் அரசுத் தரப்பு வெளியிட்டுள்ளது.
‘மேஜர்’ என்று அழைக்கப்படும் நபருடன் உரையாடியுள்ளார். அதனை உக்ரைன் பாதுகாப்புப் படை இடைமறித்து பதிவு செய்துள்ளது.
“இது 100 சதவீதம் பயணிகள் விமானம்தான். இங்கு ஆயுதங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. துணிகள், மருந்துகள், டாய்லெட் காகிதம் போன்றவைதான் கிடக்கின்றன. பெண்கள், குழந்தைகளின் உடல்களும் சிதறிக் கிடக்கின்றன” என்று அந்த உரையாடல் பதிவில் உள்ளது.