

புதுடெல்லி: “இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை மனித நலனுக்கே” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவும் பணியில் நேரடியாக பங்கு பெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: “உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் நமது கலாச்சாரம். உலகில் எங்கெல்லாம் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் உடனடியாகச் சென்று உதவுவதே நமது முதன்மையான முன்னுரிமை.
உலகமே தற்போது நல்லெண்ணத்துடன் இந்தியாவை பார்க்கிறது. ஆபரேஷன் தோஸ்த் என்ற திட்டத்தின் கீழ் துருக்கி மற்றும் சிரியாவுக்குச் சென்று சேவை செய்துவிட்டு வந்த உங்களுடனான இந்தச் சந்திப்பு எப்போதும் நினைவில் இருக்கும்” என தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, ஆபரேஷன் தோஸ்த் திட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பலரும் தங்கள் அனுபவங்களை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு கிடைத்த பாராட்டு, அன்பு எத்தகையது என்பதை நெகிழ்ச்சியுடன் அவர்கள் கூறினர். மேலும், இந்தப் பயணத்தின்போது தங்களுடன் வந்து கட்டிடங்களுக்குள் புதைந்து இருந்தவர்களை கண்டறிய உதவிய மோப்ப நாய்கள் குறித்தும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். அந்த மோப்ப நாய்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன.