

பிஹார் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில், 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும், 70 சதவீதம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்
பிஹார் மாநிலத்தின் கல்வித்தரம் குறித்தும், தேர்வு முறை குறித்தும் அவ்வபோது செய்திகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், தற்போது, பிஹார் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு முடிவுகள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்வெழுதிய மொத்த மாணவர்களில் 70 சதவீதம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும், 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். மொத்தம் 30.11 சதவீதம் அறிவியல் மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சராசரியாக 44.66 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் காமர்ஸ் பாடத்தில் 73.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் போனதற்கு புதிய கண்காணிப்பு முறைகளும், கடுமையான நடவடிக்கைகளுமே காரணம் என கூறப்படுகிறது.
கடந்த வருடம் இப்படியான கடும் நடவடிக்கைகள் ஏதும் இல்லாத போது 67.06 சதவித அறிவியல் மாணவர்களும், 80.87 சதவித கலை மாணவர்களும் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.