

புதுடெல்லி: சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜனுக்கு, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளதற்கான அறிவிப்பினை பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவரான பிரைம் பாயின்ட் கே.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ''பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன் மற்றும் சன்சத் ரத்னா விருதளிப்புக் குழு ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 13 ஆண்டு காலமாக சன்சத் ரத்னா விருது வழங்கும் விழாக்களை நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மிகச் சிறந்த பங்களிப்பை அனைத்துத் துறைகளிலும் வழங்கி, அதிக மதிப்பெண் புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு அகில இந்திய அளவில் 'சன்சத் ரத்னா' எனும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆலோசனையின் பேரில் அவரைக் கொண்டே தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குரியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதிகள், சான்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புகளைக் கொண்ட நடுவர் குழு, விருதாளர்களைத் தெரிவு செய்து அறிவித்து இருக்கிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் நடுவர் குழுத் தலைவராகவும், இந்தியத் தேர்தல் ஆணையரகத்தின் தலைமை ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைத் தலைவராகவும் இயங்கி, இந்தப் பட்டியலை தயாரித்துள்ளனர்.
அதன்படி, பொதுப் பிரிவில் ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுக்கு பாஜக எம்.பி பரன் மகதோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த சுகந்த மஜூம்தார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குல்தீப் ராய் ஷர்மா ஆகியோர் முதல்முறை எம்பி பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுக்கு பாஜகவைச் சேர்ந்த ஹீனா விஜயகுமாரும், விவாதங்களை தொடக்கிவைப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், தனி நபர் மசோதாக்களை அதிக அளவில் கொண்டு வந்ததற்கான விருதுக்கு பாஜகவைச் சேர்ந்த கோபால் சினய்யா ஷெட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சிறப்பாக கேள்விகளை எழுப்பியவர்கள், ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மிகச் சிறந்த நாடாளுமன்ற வாதியாகவும், பொதுவாழ்வில் நீண்ட காலம் இருக்கக்கூடியவராகவும் உள்ளவருக்கு ஆண்டுதோறும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விருதுக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான டி கே ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 25-ஆம் தேதி புதுடெல்லியில் நியூ மகாராஷ்டிரா சதன் மாளிகையில் நடைபெற உள்ளது'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.