

கோஹிமா: கடந்த 1989-ம் ஆண்டில் நாகாலாந்தில் மது விற்பனைக்கு முழு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து நாகாலாந்துக்கு மது கடத்தி வருவது அதிகரித்தது.
இந்த சூழலில் அந்த மாநிலத்தில் வரும் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வாக்காளர்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்க கடத்தல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன. இதை தடுக்க நாகாலாந்து பெண்கள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.
சாக்கிசங் மதர்ஸ் அசோசி யேஷன் என்ற அமைப்பு சார்பில்நாகாலாந்தின் பல்வேறு மாவட் டங்களில் 100 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அசோசியேஷன் சார்பில் அந்தந்த பகுதியை சேர்ந்த தங்கள் கிராமங்களில் மூங்கில் கட்டைகள் மூலம் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் அவர்கள் சோதனை செய்கின்றனர். அந்த வாகனங்களில் மதுபானங்கள் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து சாக்கிசங் மதர்ஸ் அசோசியேஷன் தலைவர் தன்யி கூறியதாவது:
தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினர் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்திவந்து ஆண்களுக்கு அளிக்கின் றனர். குடிபோதையால் குடும்பங் களில் பிரச்சினைகள் எழுகின்றன. எனவே எங்கள் அமைப்பு சார்பில் முக்கிய பகுதிகளில் 100 சோதனை சாவடிகளை அமைத்துள்ளோம். ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் விழித்திருந்து சோதனை நடத்துகிறோம். எங்கள் அமைப்பை சேர்ந்த பெண்கள் வாகனங்களில் ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்டை மாநிலமான மணிப்பூர் பகுதியில் இருந்து நாகாலாந்தில் வாகனங்கள் நுழையும் இடத்தில் 4 சோதனை சாவடிகளை அமைத் திருக்கிறோம். அரசு வாகனங்களை தவிர்த்து இதர வாகனங்கள் அனைத்தையும் சோதனை நடத்துகிறோம். மதுபானங்களை பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்து வருகிறோம்.
பல்வேறு தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். சுமார் 80 கிராமங்களை சேர்ந்த பெண்கள் எங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு தன்யி தெரிவித்தார்.
நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 71,334 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டி ருக்கிறது. போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலைவிட தற்போதைய தேர்தலில் 10 மடங்கு அதிகமாக மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.