

கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சராசரியாக தினமும் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த 2 ஆண்டுகளில் 23 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உள் துறை அமைச்சகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் 2016-ல் 449 முறையும் 2015-ல் 405 முறையும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உள்ளது. அதாவது சராசரியாக தினமும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த 2 ஆண்டுகளில் நடந்த தாக்குதலில் 23 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாயினர்.
காஷ்மீரில் 2016-ல் 322 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்ததில், 82 பாதுகாப்புப் படையினர் மற்றும் 15 பொதுமக்கள் பலியாயினர். 2015-ல் 208 தாக்குதல் சம்பவங் கள் நடந்ததில், 39 வீரர்கள் மற்றும் 17 பொதுமக்கள் பலியா யினர். இதே ஆண்டில் 108 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
கடந்த 2012 முதல் 2016 வரையிலான காலத்தில் 1,142 தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் 236 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 90 பொதுமக்கள் பலியாயினர். இதே காலத்தில் 507 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.பக் ஷி கூறும்போது, “இந்தியாவுக்கு எதிராக பாகிஸ் தான் மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகிறது. அமைதி பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து பாகிஸ்தான் பேசி வந்தாலும், அதில் அந்த நாட்டுக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு காஷ்மீர் மாநில சம்பவங்களே உதாரணமாக உள்ளன” என்றார்.