Published : 26 May 2017 08:10 AM
Last Updated : 26 May 2017 08:10 AM

மக்கள் நெரிசல் மிக்க உலக நகரங்கள்: மும்பைக்கு 2-வது இடம்

உலகின் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் மும்பை 2-வது இடத்தில் உள்ளது. வங்கதேசத் தலைநகர் டாக்கா முதலிடத்தில் உள்ளது.

ஐ.நா.வின் மக்கள் வாழ்விடம் குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூஇஎப்) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உலகின் மக்கள் நெரிசல் மிகுந்த நகரமாக வங்கதேச தலைநகர் டாக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 44,500 பேர் வசிக்கின்றனர். அதற்கடுத்து 2-வது இடத்தில் மும்பை உள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 31,700 பேர் வசிக்கின்றனர்.

உலகின் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரம் 7-வது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 12,100 பேர் வசிக்கின்றனர்.

கொலம்பியாவின் மெடலின் நகரம் 3-வது இடம் (19,700 பேர்), பிலிப்பைன்சின் மணிலா நகரம் 4-வது இடம் (14,800 பேர்), கசபிளாங்காவின் மொராக்கோ நகரம் 5-வது இடம் (14,200) வகிக்கின்றன.

தவிர 6-வது இடத்தில் நைஜீரியாவின் லாகோஸ் (13,300), 8-வது இடத்தில் சிங்கப்பூர் (10,200), 9-வது இடத்தில் இந்தோனேசியாவின் ஜாகர்த்தா (9,600) ஆகிய நகரங்கள் உள்ளன.

நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வேலைதான் முக்கிய காரணமாக உள்ளது என்று உலக பொருளாதார அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரங்களில்தான் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டுக்குள் 66 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஐ.நா. எதிர்பார்க்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x