

புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்க கோரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமியின் பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தார் கடந்த ஜனவரி19-ம் தேதி தெரிவித்திருந்தார். மத்திய அரசின் நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டால், உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம்என சுப்பிரமணியசுவாமியிடம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில், நேற்று ஆஜரான சுப்பிரமணிய சுவாமி ராமர் பாலம் விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், எனது பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
அரசியல்சாசன அமர்வில் அனைத்து வழக்குகள் முடிந்ததும், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.