

உச்சநீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தின் பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை அளித்து கடந்த 9-ம் தேதி தீர்ப்பளித்தது. அவரை கைது செய்து சிறையில் அடைக்கும்படி கொல்கத்தா போலீஸ் டிஜிபி-க்கும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிபதி கர்ணன் தலைமறைவாகி விட்டதால், அவரை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. தண்டனையை ரத்து செய்யக் கோரி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்ய முயற்சி நடந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் வாங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மேத்யூஸ் நெடும்பாரா மற்றும் ஏ.சி.பிலிப் ஆகியோர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘குடியரசுத் தலைவர் அரசியல் சாசன பிரிவு 72-ன் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்டுள்ள 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா, ‘‘நீதிபதி கர்ணன் மற்றும் அவரது மகன் சுகன் சார்பில் நாங்கள் குடியரசுத் தலைவரிடம் மனுத் தாக்கல் செய்துள்ளோம். இந்த மனுவை குடியரசுத் தலைவரின் செயலர் அசோக் மேத்தாவிடம் நேரடியாக ஒப்படைத்துள்ளோம். கர்ணன் கைது செய்யப்பட்டால் அதிலிருந்து நிவாரணம் பெற எந்த சட்ட வழிமுறையும் இல்லாததால், அந்த முகாந்திரத்தின் அடிப்படையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளோம்’’ என்றார்.
அரசியல் சாசன சட்டப்பிரிவு 72-ன் படி, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ குடியரசுத் தலைவருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.