

போலி பான் கார்டு (நிரந்தர கணக்கு எண்) பெறுவதைத் தடுக்கவே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில், ''ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்துவதற்காக, போலியான பான் கார்டுகள் நாடு முழுவதும் புழக்கத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இத்தகைய வாதங்கள், ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமையை கீழ்படியச் செய்வதாகும். இவை பொருத்தமற்றவையும், துரோகம் இழைப்பவையும் ஆகும்.
ஆதாரை கட்டாயமாக்குவதற்காக தொடர்ந்து அதனுடைய இலக்குகள் மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதற்காக வருமான வரிச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவின் மூலம் இதனைச் செயல்படுத்த முயல்வது, ஆபத்தான விளையாட்டு'' என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மற்றும் நிதி சட்டம் 2017 மூலம் வருமான வரிச் சட்டத்தில் 139 ஏஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் பான் எண் பெறுவதற்கும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என இந்தப் பிரிவு கூறுகிறது.
இந்தப் பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதத்தின் போது, மத்திய அரசு, போலி பான் கார்டு பெறுவதைத் தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தது.