

புதுடெல்லி: அரசியல் சாசனத்தின் 4-வது பகுதியின் ஏ-பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளை அமல்படுத்த கோரி வழக்கறிஞர் துர்கா தத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் கூறியிருப்பதாவது: அடிப்படை கடமைகளை பின்பற்றாதது, அரசியல் சாசன பிரிவுகளில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு சில சட்டங்களை தவிர அடிப்படை கடமைகளை அமல்படுத்துவதில் சீரான கொள்கை எதுவும் இல்லை.
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை காக்கவும், இயற்கை சுற்றுசூழலை பாதுகாக்கவும் தங்கள் கடமையை செய்வதை ஊக்குவிக்க வேண்டிய நேரம் இது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அடிப்படை கடமைகளை அமல்படுத்துவது தொடர்பான சட்டங்களை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதலைமையில் உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோதே, அப்போதைய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘அடிப்படை கடமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏராளமான பணிகளை செய்துள்ளது. இது போன்ற மனுக்களை தாக்கல் செய்யும் முன் மனுதாரர் சில உண்மைகளை ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’’ என்று வாதிட்டார்.
அடிப்படை கடமைகளை செயல்படுத்துவது குறித்து நீதிபதி ஜே.எஸ்.வர்மா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அடிப்படை கடமைகளை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், மனோஜ் மிஸ்ரா மற்றும் அரவிந்த குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ரஞ்சித் சிங் வாதிடுகையில், சில மாநிலங்கள் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்த சில மாநிலங்களும் தாமதமாக தாக்கல் செய்துள்ளன’’ என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறுகை யில், ‘‘பதில் மனு தாக்கல் செய்யாதமாநிலங்களின் துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் அடுத்த விசாரணையின் போது காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். குறிப்பிட்ட தேதியில் பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களும், தாமதமாக பதில்மனு தாக்கல் செய்த மாநிலங்களும், கடந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது போல் ரூ.25,000 அபராதம்செலுத்த வேண்டும். பதில் மனுதாக்கல் செய்ய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கும் கடைசி வாய்ப்பு அளிக்கப்படு கிறது’’ என்று உத்தரவிட்டனர்.
அதற்கு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பிர் சிங், மத்திய அரசின் பதில் மனு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை கடமைகளை அமல் படுத்த கோரும் மனுதாரர் ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யா அரசியல் சாசனங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார். 32 மனுக்களில் சீனஅரசியல் சாசனத்தை நம்பியிருக்கும் நபரை நாங்கள் பார்த்ததில்லை’’ என்றார். இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை மார்ச் 28-ம் தேதி நடைபெறுகிறது.