Published : 16 Feb 2023 04:07 AM
Last Updated : 16 Feb 2023 04:07 AM

நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2 லட்சம் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்க மத்திய அமைச்சரவை அனுமதி

புதுடெல்லி: நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2 லட்சம் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:

நாடு முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள், அமைப்புகளை பலப்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு கடன் சங்கங்களை நாடு முழுவதும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 63 ஆயிரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதை கிராமப்புற அளவில் இருந்து அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் இந்த சங்கங்களை புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2 லட்சம் தொடக்க வேளாண், பால்பண்ணை, மீன்வள கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியை அமைச்சரவை ஒதுக்கித் தரும்.

இந்த கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை, சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள், பால் வியாபாரம் செய்வோர், மீனவர்கள் பெறுவார்கள். மேலும் அவர்கள் பொருட்கள் வாங்க கடன் உதவியும் வழங்கப்படும். இதையடுத்து அவர்களது வருமானம் அதிகரிக்கும். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக கூட்டுறவு மற்றும் உள்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த செயல் திட்டத்தை சுமுகமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற பொருளாதாரத்தில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவற்றை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களில் கூட்டுறவு சங்கங்களை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கீடு: வட மாநிலங்களில் எல்லையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ‘எழுச்சிமிகு கிராமங்கள்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2025-26 வரை இத்திட்டத்துக்கு ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையை வலுப்படுத்தவும் ஒப்புதல்: சீன நாட்டுடன் எல்லை பிரச்சினையில் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் எல்லை பகுதியில் நமது துணை ராணுவப் படையான இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையை (ஐடிபிபி) வலுப்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஐடிபிபி பிரிவில் கூடுதலாக 7 பட்டாலியன்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த பட்டாலியன்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கான அனுமதியை தந்துள்ளது.

இதேபோல, மத்திய ஆயுத போலீஸ் படையையும் (சிஏபிஎஃப்) வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எல்லை பகுதியில் புதிதாக 47 கண்காணிப்புச் சாவடிகள் அமைக்கப்படும். அருணாச்சல் பகுதியில் அதிக அளவில் எல்லைச் சாவடிகள் அமைக்கப்படும்.

புதிதாக எல்லைச் சாவடிகள் அமைத்தல், குடியிருப்பு கட்டிடங்கள், அலுவலகங்கள் அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதற்காக ரூ.1,808.15 கோடி செலவிடப்படும் என்றும் அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x