

மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலைகள் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்நிலையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் #திராவிடநாடு (#dravidanadu) என்ற ஹேஷ்டேக் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதலே ட்ரண்டாகிவருகிறது. சென்னையளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்டாகிவருகிறது.
தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனி நாடு என்ற கருத்துகளை முன்வைத்து பலரும் தங்களது கருத்துகளை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்து வருகின்றனர்.
அதேவேளையில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர பிரிவினையைத் தூண்டும் வகையிலான ஹேஷ்டேக்குகளை ட்ரண்டாக்குவது சரியல்ல என்ற வாதத்தையும் சிலர் முன்வைத்துள்ளனர்.
சசிதரூர் முன்வைக்கும் வேண்டுகோள்
மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடை முடிவை கேரள மாநிலம்தான் வெகுக்கடுமையாக எதிர்க்கிறது. இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் #திராவிடநாடு தொடர்பான ட்வீட் ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, "மோடி அரசின் மீதான விமர்சனங்கள் உண்மையென்றாலும். தனிநாடு போன்ற தேசவிரோதக் கொள்கைகளைத் தூண்ட வேண்டாம் என எனது சக தென்னக மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் இந்தியாவை மேம்படுத்துவோம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.