

கொலை, கொள்ளை சம்பவ செய்திகள் எப்போதுமே பரபரப்பாக பின்பற்றப்படக் காரணம் அதில் உள்ள மர்ம முடிச்சுகள் எப்படி அவிழ்க்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே.
அப்படித்தான் பெங்களூருவில் நடந்த ஒரு பெண்ணை கொலை செய்த நபரை போலீஸார் கண்டுபிடித்த விதமும் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 4-ம் தேதி பெங்களூருவின் ஜெயாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த 57 வயது பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். வீட்டில் இருந்து சில பொருட்கள் திருடுபோய் இருந்தன. பக்கத்து அறையில் மகன் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. கொலையானவரின் மகன் தங்கியிருந்த அறையின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. வீட்டில் பெரிதாக கொலைக்கான தடயம் ஏதும் கிடைக்கவில்லை. இப்படியான சூழலில்தான் விசாரணையைத் துவக்கினர் திலக்நகர் போலீஸார்.
பொருட்களுக்காகவே கொலை நடந்திருந்தது என்பதுமட்டும் போலீஸாருக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், அதைமட்டுமே வைத்துக் கொண்டு வழக்கு விசாரணையில் போலீஸாரால் மேலும் முன்னேற முடியவில்லை.
அப்போதுதான் தடயவியல் துறையினர் சேகரித்திருந்த ஒரு தடயம் வழக்கில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் அறையில் இருந்து சில நுண்ணுயிரி திரட்டப்பட்டன. நல்ல சுத்தமான அறையில் அத்தகைய நுண்ணுயிரி இருப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. அதைவிட முக்கியமானது குறிப்பிட்ட வகையிலான அந்த நுண்ணுயிரி குப்பை கிடங்குகளில்தான் அதிகம் வளரும். எனவே, கொலையாளிக்கு குப்பைக் கிடங்குக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் துவக்கினர்.
இதைவைத்துக் கொண்டு போலீஸார் அந்தப் பகுதியின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ச்சி செய்தனர். நுண்ணுயிரி வாழும் இடத்துக்குச் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் கொலை நடந்த நாளில் அந்தப் பகுதியில் நடமாடியுள்ளனரா என்று ஆய்வு செய்தனர். அப்போது குப்பைகளை சேகரிக்கும் இளைஞர் ஒருவர் கொலை சம்பவம் நடந்த நாளன்று அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
சிசிடிவி பதிவை வைத்துக் கொண்டு போலீஸார் சோதனையில் ஈடுபட்டபோது சப்பார் கணேஷ் என்ற 19 வயது இளைஞர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், நகை, பொருட்களுக்காகவே கொலையை செய்ததாகவும். எப்போதுமே, குப்பை சேகரிக்கச் செல்லும் பகுதிகளில் சற்று ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை தெரிவு செய்து அங்கு திருடுவது வழக்கம் என்றும் கணேஷ் கூறினார்.
போலீஸ் தரப்பில், " கணேஷுக்கு ஒயிட்னரை (whitener) போதை வஸ்துவாகப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. பணத்துக்காக சிற்சில திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவார். குப்பை சேகரிக்கச் செல்லும் பகுதிகளில் தனியாக வீட்டில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவருக்கு சக்திவேலு, சின்னராஜூ என்ற கூட்டாளிகளும் இருக்கின்றனர். இந்தக் கொலையில் பெரிதாக அப்பட்டமான தடயமோ, சிசிடிவி பதிவோ கிடைக்காத நிலையில் நுண்ணுயிரிதான் முக்கிய தடயமாக எங்களுக்கு உதவியது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.