தொழில்நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
புதுடெல்லி: தொழில்நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தொழில்நுட்ப வளர்ச் சிக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தினார்.
காணொலி முறையில் உயர் நீதிமன்ற விசாரணைகளின்போது வழக்கறிஞர்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஆஜராவதற்கான வசதிகள் உள்ளன. கரோனா பெருந்தொற்று காலங்களில் காணொலிமுறை செயல்படுத்தப்பட்டுவந்தது.
தற்போது வழக்கம் போல நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதால் வழக்கறிஞர்களும், வாதி, பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து வந்தனர். காணொலி முறையை ஏற்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மறுத்துவந்தனர்.
இதுதொடர்பாக பல்வேறு மாநில உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன்கள் உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தன.
இதுகுறித்து நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது: நீதிமன்றங்களுக்கு அணுகலை வழங்குவதற்கும், நீதி வழங்கல் முறையை சீர்படுத்துவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பம் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் தனிப்பட்ட வசதிகளை சார்ந்து இருக்கக்கூடாது.
தொழில்நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தங்களை மாற்றிக் கொண்டு அதன்போக்கில் செயல் படவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி நீதிமன்ற விசாரணையை அவர்கள் நடத்தலாம். சில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் காணொலி விசாரணை முறையை நிராகரிக் கின்றனர். இதனால் நான் வருத்தம் அடைந்துள்ளேன்.
வழக்கறிஞர்களுக்கு அணுகலை வழங்குவதற்காக கணிசமான முதலீட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பை நீதிபதிகள் கைவிடுகின்றனர். இந்தநிலை மாறவேண்டும். இந்த விஷயங்களில் நீதிபதிகள் தங்களதுசொந்த, விருப்ப வெறுப்பு, தனிப்பட்ட வசதியைப் பார்க்கக்கூடாது.
இந்தத் தொழில்நுட்ப வசதியானது பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நினைக்கும் போதுதான் பிரச்சினை எழுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அவர்கள் உறுதி செய்யவேண்டும். இதை அவர்கள்புறந்தள்ளக்கூடாது. தாலுகா மட்டத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள், வாதிகள், பிரதிவாதிகள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப வசதி செய்துள்ளோம். இதை அனைவரும் ஏற்கவேண்டும்.
மேலும், நாம் நீதிமன்றத்துக்கு வரும்போது வழக்கறிஞர்களும், வாதி, பிரதிவாதிகளும் ஏன் நீதிமன்றத்துக்கு வரக்கூடாது எனதலைமை நீதிபதிகள் நினைக் கிறார்கள். அவ்வாறு அவர்கள் நினைக்கக்கூடாது.
இந்த நிலை மாறவேண்டும். நமக்குக் கிடைத்ததொழில்நுட்ப வாய்ப்பைப் பயன்படுத்தி திட்டத்தை முன்னெடுத்துச்செல்லவேண்டும். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்து றையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
