ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு
Updated on
1 min read

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக மாறன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பிரதிபலனாக, தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்த மான சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் சட்டவிரோத மாக முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, கடந்த 2011-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதுதவிர, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை யும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை 2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இதனிடையே, இந்த வழக்கி லிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று முன்தினம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், “ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதில் மாறன் சகோதரர்களுக்கும் தொடர்பு உள்ளது. இதற்கு ஆதாரங்கள் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மாறன் சகோதரர்களை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. எனவே மாறன் சகோதரர்களை இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in