

ராஞ்சி: மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "நாட்டில் பேசுவதற்கு கூட சுதந்திரம் இல்லை" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை ஜார்க்கண்ட் மாநிலம், சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் பாகூரில் உள்ள குமானி மைதானத்தில் நடந்த பேரணியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "நாட்டில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேசுவதற்கு சுதந்திரம் இல்லை. அதையும் மீறி தைரியாமாக பேசுபவர்கள் பின்னர் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்படுகிறார்கள்.
பிரதமர் மோடி அரசு பணத்தை தொடர்ந்து அதானிக்கு வழங்கி வருகிறார். எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் அரசு வங்கிகளில் இருந்து அதானிக்கு ரூ.82 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும்போது, எங்களுடைய பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றது.
பணவீக்கத்தை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்து 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அத்தியாவசிய பொருள்களின் விலையும், வறுமையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை பெருக்கியது. சுதந்திரத்திற்காக போராடியது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கட்சியின் 60 நாள் "ஹாத்சே ஹாத் ஜோடோ" யாத்திரையை கார்கே தொடங்கிவைத்தார். இந்த யாத்திரையின்போது காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எடுத்துரைப்பார்கள். இந்தப் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அவினாஸ் பாண்டே, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஸ் தாகூர், மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.