Published : 11 Feb 2023 03:50 AM
Last Updated : 11 Feb 2023 03:50 AM

நாட்டில் முதல்முறையாக காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிப்பு - இந்திய மின்வாகன தயாரிப்பில் புதிய அத்தியாயம்

புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பதாக மத்திய சுரங்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு மையம் 2018-19 ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் புவியியல் ஆய்வை தொடங்கியது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆய்வில் ஜம்மு காஷ்மீரிலும் (யூனியன் பிரதேசம்), தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய 10 மாநிலங்களிலும் தங்கம், லித்தியம், மாலிப்டினம் உட்பட 51 வகை கனிம தொகுதிகளை கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.

லித்தியத்தின் முக்கியத்துவம்: மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதனங்களில் பயன்படுத்தப்படுவது லித்தியம் அயன் பேட்டரிதான். மின்வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் லித்தியம் மிக முக்கியமான மூலப் பொருளாக உள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் போல, லித்தியம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பசுமை எரிசக்தி: பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்கள் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்நிலையில், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதைபடிவ எரிசக்திக்கு மாற்றாக, பசுமை எரிசக்தியை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, மின்வாகனங்களை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகின்றன.

வரும் 2035-ம் ஆண்டில் உலகஅளவில் புழக்கத்தில் இருக்கும் வாகனங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவை மின்வாகனங்களாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் 2030-ம் ஆண்டில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் 30 சதவீதம் மின் வாகனங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால், மின்வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் உலக நாடுகள் சவால்களை எதிர்கொண்டுவருகின்றன. பேட்டரி தயாரிப்புக்கு லித்தியம், நிக்கல், கோபால்ட் உள்ளிட்ட கனிமங்கள்அவசியம். இவை போதுமான அளவில் கண்டுபிடிக்கப்படவில்லை.

சிலி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிக அளவில் லித்தியம் இருப்பைக் கொண்டிருக்கின்றன. மின்வாகனத் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கும் நோக்கில், உலக நாடுகள் லித்தியம் இருப்பைக் கண்டறிய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தியாவின் புதிய அத்தியாயம்: இந்தியாவில் சமீப ஆண்டுகளாக மின்வாகன விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் லித்தியம் இருப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து லித்தியம் அயன் பேட்டரி இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இதனால், மின்வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் படிமம் கண்டிபிடிக்கப்பட்டிருப்பது, உள்நாட்டிலேயே லித்தியம் அயன்பேட்டரி தயாரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x