

புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘‘ஆவணப் படத்தில் இந்தியாவுக்கு எதிரான பிம்பத்தை கட்டமைக்க பெரிய சதி நடந்துள்ளது. உலகளவில் இந்தியா பெரும் சக்தியாக உருவெடுத்து வருவதை தடுக்கவே இதுபோன்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இதை அனுமதிக்க கூடாது. குறிப்பாக ஊடகங்களை, அதுவும் பிபிசி.யை இந்தியாவில் அனுமதிக்க கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பின்னர் நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, ‘‘இந்த மனு தவறான புரிதலுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பிபிசி.க்கு தடை கோரி நீதிமன்றத்தில் எப்படி வாதாட முடிகிறது? பிபிசிக்கு முழுதணிக்கை விதிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? என கேள்வியெழுப்பினார். அதன்பின்னர் புரிதல் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.