

புதுடெல்லி: தாவூதி போரா சமூகத்தின் விலக்கி வைக்கும் நடைமுறைக்கு எதிரான 36 ஆண்டு கால வழக்கை, மதநம்பிக்கை தொடர்பான நீதித்துறையின் மறுஆய்வுக்காக 9 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்தது.
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத், மகேஷ்வரி ஆகிய 5 பேர் அடங்கிய அமர்வு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. கடந்த 1962- ம் ஆண்டு மற்றொரு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தாவூதி போரா சமூக மதத்தலைவர்களுக்கு தங்களின் மத உறுப்பினர்களை சமூக விலக்கு செய்யும் அதிகாரத்தை ரத்து செய்து தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை 9 பேர் அடங்கிய பெரிய அரசியல் சாசன அமர்வு மறுஆய்வு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படையில் தற்போதையை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.
முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கினை 9 நபர் அடங்கி அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும், சபரிமலை வழக்கு போல, மத நடைமுறைகள் தொடர்பான நீதித்துறையின் மறுஆய்வு தொடர்பான பல்வேறு சிக்கல்களை இந்த வழக்கு உள்ளடக்கி உள்ளது என்று மகாராஷ்டிரா அரசு வாதிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாவூதி போரா சமூகத்தின் தலைவரான 53-வது சையத்னா,"இந்த வழக்கின் அனைத்து சர்ச்சைகளும் 1949ம் ஆண்டு பாம்பே சமூகவிலக்குத் தடுப்புச் சட்டத்தை சுற்றியே உள்ளது. இந்த சட்டத்தினை மகாராஷ்டிரா அரசு 2017ம் ஆண்டே ரத்து செய்துவிட்டதால், எந்த நடவடிக்கையும் செல்லாது'' என்று வாதிட்டார்.
சையத்னா சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நரிமன், ''மகாராஷ்டிரா அரசின் சமூக புறக்கணிப்பிலிருந்து மக்களை (பாதுகாப்பு, தடுப்பு மற்றும் தீர்வு) பாதுகாக்கும் 2017ம் ஆண்டு சட்டம் இந்த மனுவினை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. புதிய சட்டம், 1949 ஆம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்ததோடு மட்டும் இல்லாமல், சமூக விலக்கு உள்ளிட்ட அனைத்து வகையான புறக்கணிப்புகளையும் சட்டவிரோதமாக்கியது'' என்று சுட்டிக்காட்டினார்.
மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர், சித்தார்த் பட்நாயக், ''சமூக விலக்கு குறித்த மகாராஷ்டிராவிற்கான பொது சட்டம், சமூக விலக்கை கடைபிடிக்கும் தாவூதி போரா சமூகத்தினரை பாதுகாக்காது என்றும், அந்த சமூகத்தைச் சேர்ந்த மதத்தலைவர்கள், உச்ச நீதிமன்றத்தின் 1962ம் ஆண்டின் தீர்ப்பின்படி சமூக விலக்கை கடைபிடிக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க முன்வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.
வழக்கின் பின்புலம்: சமூக விலக்கு விவகாரத்தில் தாவூதி போரா சமூகத்தின் சட்டப்போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. கடந்த 1949ம் ஆண்டு, அப்போதைய பாம்பே அரசு, சமூக விலக்குத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இதனை எதிர்த்து அப்போதைய தாவூதி போரா சமூகத்தின் தலைவர் 51வது சையத்னா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "சமூக விலக்கு" தங்களது பிரிவினரின் நிர்வாக அதிகாரங்களில் ஒன்று என்று தெரிவித்திருந்தார். 1962ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 1949ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பு வந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர், 1986ம் ஆண்டு தாவூதி போரா சமூகத்தின் சீர்திருத்தவாதிகளாக கருதப்படும் தாவூதி போரா சமூக வாரியம், ரிட் மனு ஒன்றினை தாக்கல் செய்தது. அந்த மனுவில், சில குடும்பங்களால் குற்றம் சாட்டப்படும் சமூகவிலக்கு உண்மையா என்பதைக் கண்டறிய கடந்த 1977-ம் ஆண்ட நீதிபதி நரேந்திர நத்வானி தலைமையிலான ஆணையத்தின் கண்டுபிடிப்புகளை சுட்டிக்காட்டியிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு நரேந்திர நத்வானி ஆணையம், சமர்ப்பித்த அறிக்கையில் குற்றச்சாட்டு பொய் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், சமூக விலக்கை சட்டவிரோதமாக மாற்றவேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. கடந்த 1994- ல் இந்த விவாகரம் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ''இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது. ஆனால், 2004-ல் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை முதலில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.
9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு: இதற்கு முன்பு அனைத்து வயது பெண்களும் கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குச் செல்லாம் என்று 2018- ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது. அப்போது, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதநம்பிக்கைகளில் உள்ள நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்டு, இந்த அமர்வு முன் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளை குறிப்பிட்டு அவைகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்தது. 9 பேர் அடங்கிய அமர்வு அந்த வழக்கை இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.