

புதுடெல்லி: கடந்த 6 ஆண்டுகளில் உயர் கல்விக்காக 30 லட்சம் இந்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. ராஜிவ் ரஞ்சன் சிங் உள்ளிட் டோர் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
மத்திய உள்துறை அமைச்சகத் தின் கீழ் இயங்கும் குடியேற்றத் துறை, வெளிநாடு செல்லும் மற்றும் அங்கிருந்து நாடு திரும்பும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை நிர்வகித்து வருகிறது.
இதன்படி கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர். வெளிநாடு செல்வோர் வாய்வழியாக தெரிவிக்கும் தகவல் மற்றும் வழங்கப்படும் விசா வகையின் அடிப்படையில் இந்த தகவல் சேகரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் வெளிநாடு சென்றவர்களில் 7.5 லட்சம் பேர் உயர்கல்விக்காக செல்வதாக தெரிவித்துள்ளனர். இதுபோல, 2021-ல் 4.4 லட்சம், 2020-ல் 2.59 லட்சம், 2019-ல் 5.8 லட்சம், 2018-ல்5.1 லட்சம், 2017-ல் 4.5 லட்சம் பேர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார்.