

வரும் 2019 மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லாதது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் செலவினங்களை குறைப்பதற்காக மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை களுக்கான தேர்தலை ஒரே சமயத்தில் நடத்த வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வலியுறுத்தி வரு கின்றனர். ஒரு சில மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எனினும் 2019-ல் நடக்கும் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமில்லா தது என தெரியவந்துள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, ‘‘உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ள நிலையில், அடுத்த இரு ஆண்டு களில் மீண்டும் தேர்தலை சந்திக்க பாஜக விரும்பவில்லை. கோவா, மணிப்பூரிலும் இதே நிலை நிலவு கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர் களும் ஆட்சியை கலைத்து விட்டு 2019-ல் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் 2019-ல் தேர்தலை நடத்தி விட்டு, 2024-ல் மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்’’ என தெரி விக்கின்றன.
வரும் 2019-ல் மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, தெலங் கானா, ஒடிசா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தப் படவுள்ளது. அடுத்த 4 மாதங் களில் தேர்தலுக்கு தயாராக வுள்ள ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக் கான சட்டப்பேரவைத் தேர்தலை யும் அப்போது முன்கூட்டியே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இறுதியில் ம.பி., சத்தீஸ்கர், திரிபுரா, ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இம்மாநிலங்களின் தேர்தலை 2019 வரை ஒத்திவைத்து நடத்துவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இம்மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிந்ததும் 2019 மே மாதம் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டத்திலும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு, 2024-ல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.