Published : 16 May 2017 12:36 PM
Last Updated : 16 May 2017 12:36 PM

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தமிழநாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்

பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்,

"மருத்துவப் படிப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் 2010&ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு செல்லாது என்று கடந்த 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் நுழைவுத் தேர்விலிருந்து மத்திய அரசு சிறப்புச் சட்டத்தின் மூலம் விலக்களித்திருந்தது.

ஆனால், நடப்பாண்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டதால், மொத்தமுள்ள 65,000 இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் நுழைவுத்தேர்வு எழுதினர். இந்தியா முழுவதும் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டாலும் தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வட மாநிலங்களில் மாணவர்கள் சுதந்திரமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், தென் மாநிலங்களில் தேர்வுக்கு முன்பாக சோதனை என்ற பெயரில் மாணவர்களும், மாணவிகளும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். கேரளத்தில் மாணவி ஒருவர் ஆசிரியர்கள் முன்னிலையில் உள்ளாடைகளை களையச் செய்து கொடுமைக்குள்ளாக்கப்பட்ட செய்தி தங்களின் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நம்புகிறேன். இத்தகைய காரணங்களால் தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பான்மையானோர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை சரியாக எழுத முடியவில்லை.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நுழைவுத்தேர்வுகளில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானால் அதை சமாளிப்பதற்காக ஒரே மாதிரியான விடை கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட வினாத்தாள் தொகுப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு தயாரிக்கப்பட்டவற்றில் எளிமையான வினாத்தாள்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளன.

கடினமான வினாத்தாள்கள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வினியோகிக்கப்பட்டன. இது திட்டமிட்டு நடந்ததா அல்லது எதேச்சையாக நடந்ததா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்க படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

இவற்றையெல்லாம் விட இன்னொரு வகையிலும் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும் கூட தமிழகத்திற்கு மட்டும் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்கப் பட்டிருந்தது. இதனால் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் கிராமப்புற மாணவர்களின் அளவு 20 விழுக்காட்டிலிருந்து 76 விழுக்காடாக அதிகரித்தது.

ஆனால், இப்போது திடீரென மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டிருப்பதால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான, ஒரே தரத்திலான கல்வி வழங்கப்படும் போது தான் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு சாத்தியமாகும். ஆனால், பணக்காரர்கள் கற்கும் கல்விக்கும், ஏழைகள் கற்கும் கல்விக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கும் போது பொது நுழைவுத் தேர்வு என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

தமிழ்நாட்டில் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் கடந்த 2006-ஆம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் 2007-ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப் பட்டன. நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை அப்போதையை தமிழக அரசு தன்னிச்சையாக எடுத்துவிடவில்லை. மாறாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடமும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கல்வியாளர்கள் குழுவைக் கொண்டு ஆய்வு செய்து தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட போது, நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 25.01.2007ஆம் தேதியிட்ட அலுவலக குறிப்பாணை (Office Memorandum) மிகவும் குறிப்பிடத்தக்கது.

அதில்,‘‘இயற்கை நீதியைக் கருத்தில் கொண்டு இந்த அலுவலக குறிப்பாணையின் 5-ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வெவ்வேறு பாடத்திட்டத்தை பயிலும் மாணவர்களுக்கு சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 1) குஜராத் மாநிலத்தில் கடைபிடிக்கப்படுவதைப் போன்று விகிதாச்சார ஒதுக்கீடு, 2) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் பின்பற்றப்படுவதைப் போன்ற மதிப்பெண் சமன்படுத்தும் முறை, அல்லது 3) இவற்றுக்கு இணையான வேறு முறையை கடைபிடிக்கும் பட்சத்தில் தமிழக அரசின் சட்டத்தை செயல்படுத்துவதுவதில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

அதுமட்டுமின்றி, இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இயற்றப்பட்ட சட்டம் தான் என்பதால் மத்திய சட்டத்திற்கோ அல்லது கொள்கைக்கோ எந்த வகையிலும், எந்த காலத்திலும் தடையாக இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் (This Ministry conveys its no objection for enactment of the above Bill subject to consideration of the options mentioned of para 5 above in the interest of natural justice. It is further added that the Bill will not be an hindrance to the Central Act or Policy, as it is limited to a particular state which has certain reasons.)’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிப்பதால் மத்திய சட்டத்திற்கோ, கொள்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அலுவலகக் குறிப்பாணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தன. 2007-ஆம் ஆண்டில் இந்த அலுவலக குறிப்பாணை வழங்கப்பட்ட போது நான் தான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தேன். எனது ஒப்புதலுடன் தான் அலுவலக குறிப்பாணை வழங்கப்பட்டது.

தமிழகத்தின் கல்விச் சூழலும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் அலுவலக குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களும் இன்றைய சூழலுக்கும் பொருந்தும். தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற, ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x