Published : 06 Feb 2023 05:31 AM
Last Updated : 06 Feb 2023 05:31 AM
புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றம் 73-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுந்தரேஷ் மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:
இந்திய மக்களின் தினசரி வாழ்க்கைப் போராட்ட வரலாறு தான் உச்ச நீதிமன்றத்தின் வரலாறு. நாட்டு மக்களை அநீதியிலிருந்து பாதுகாப்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் பணி.
நாட்டு மக்களின் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண 1980-ம் ஆண்டு முதல் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 12,108 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதேநேரம் நீதிபதிகள் 12,471 வழக்குகளை முடித்து வைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. முதலில் ‘மாறிவரும் உலகில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பேசியதாவது:
உலகிலேயே மிகவும் பரபரப்பானது இந்திய உச்ச நீதிமன்றம். அதன் நீதிபதிகள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். பொதுமக்களின் நலனை மையமாகக் கொண்டு நீதி வழங்க முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் நேர்மையாகவும் திறமை அடிப்படையிலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்.
நீதிமன்றங்கள் என்பது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களையும் உள்ளடக்கியது. எனவே, நீதிமன்றங்களில் சுதந்திரமாக தங்கள் வாதத்தை எடுத்துரைப்பதற்கான சூழல் நிலவுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
சிக்கலான வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் நீதிமன்றங்கள் பாரம்பரிய நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க முடியாது. புதிய வழிகளுக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் நீதி வழங்குவதில் பின்னடைவு ஏற்படும். எனவே, மாறிவரும் தொழில்நுட்பங்கள் குறித்து நீதித்துறையினர் அவ்வப்போது பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீதித் துறையை பொருத்தவரை நம்பிக்கையின்மை மிகவும் முக்கிய சவாலாக உள்ளது. நீதிமன்றங்கள் தங்கள் சட்டப்பூர்வ தன்மையைஇழக்கக் கூடாது. நீதிமன்ற தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். புதிய வழிகளுக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் நீதி வழங்குவதில் பின்னடைவு ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT